Published : 18 Mar 2016 10:19 AM
Last Updated : 18 Mar 2016 10:19 AM

வணிக நூலகம்: தடைகளைத் தாண்டி வருவாய்!

நாம் மேற்கொள்ள வேண்டிய எந்தவொரு முடிவானாலும் குறைந்தபட்சம் நான்கு விதமான தேர்வுகள் இருப்பதாக சொல்கிறார் ஆசிரியர்.

அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் பெண்களுக்கான சம உரிமை மற்றும் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு என்றெல்லாம் பேசப்பட்டுவரும் சூழ்நிலையில், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெறத் தேவையான சாத்தியக்கூறுகள் என்ன என்பதைப்பற்றி பெண்கள் அறிந்துகொள்வதும் அவசியமான ஒன்றே.

சர்வதேச பெண்கள் தினம் (மார்ச் 8) கொண்டாடப்பட்ட வேளையில், பெண் களுக்காக பெண் நூலாசிரியரால் எழுதப்பட்ட புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும் அல்லவா!. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பும் பெண்களுக்கான அனைத்து விதமான வழிமுறைகளையும் கொண்டுள்ளது “ஹெலென் லெர்னர்” அவர்களின் “தி கான்பிடன்ஸ் மித்” என்ற இந்த புத்தகம்.

வெற்றியை தடுக்கும் பயம்!

வெற்றியை நோக்கி நடைபோடும் நமது செயல்பாடுகளைத் தடுக்கும் மிக முக்கியமான காரணி நமது பயமே என்கிறார் ஆசிரியர். பொதுவாக பயமானது உண்மை நிலையினைத் தகர்த்து பொய்யான நம்பிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது அந்த பயத்தின் ஊடாகவே பெண்களால் முன்னேறிச் செல்லமுடிகின்றது. பெரும்பாலும் ஆண்களுடன் பணிபுரியும் அல்லது தொழில் நிறுவனங்களை நடத்திவரும் பெண்கள், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி தங்களது தனித்திறன் வாய்ந்த கருத்துகளை தைரியமாக வெளிக்கொணர வேண்டும். பயத்தை உதறித்தள்ளி பக்காவாக பணியாற்றுங்கள் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

அமைதியாக இருந்துகொண்டு அவ்வப்போது தங்களது கருத்து களையும் எண்ணங்களையும் வெளிப் படுத்தினால் போதும் என்றில்லாமல், தொடர்ந்து தங்களது எண்ணங்களை தெரிவிப்பதை பெண்கள் வழக்க மாக்கிக்கொள்ள வேண்டும். கருத்து களை பகிர்தலில் மட்டுமல்லாமல், அடுத்தவர்களின் உதவியை நாடும் போதும், திட்டங்களை செயல்படுத்தும் போதும், சிக்கல்களை ஆராயும்போதும் பெண்கள் தங்களது தயக்கத்தையும் பயத்தினையும் தள்ளிவைக்க வேண்டியது அவசியம். இதன்மூலமே அனைத்து நிலைகளிலும் பெண்களால் எதிர்கொள்ளப்படும் ஆண், பெண் பாலின பாரபட்சங்களையும் களைய முடியும் என்கிறார் ஆசிரியர்.

இலக்கின் செயல்பாடு!

நமது எந்தவொரு செயல்பாடும் துல்லியமான ஒரு இலக்கினை நோக்கியே இருக்க வேண்டும். சரியான, துணிவான ஒரு இலக்கை அடையாளம் காணவேண்டியது பெண்களின் வெற்றிக்கான முழுமுதற் காரணி. உணர்ச்சிகரமான அதேசமயம் தேவையான ஈடுபாடுடன் உள்ளதாக அது இருக்க வேண்டும். அது பதவி உயர்வின் மீதான இலக்கோ அல்லது தொழில் விருத்திக்கான இலக்கோ எதுவாயினும் இலக்கை உயர்வானதாக அமைத்துக்கொள்ள வேண்டும். இலக்கு பெரியதாக இருக்கும்போது மட்டுமே அதற்கான எண்ணமும் செயல்பாடும் பெரிதாக அமையும்.

அடுத்து நிர்ணயம் செய்த பெரிய இலக்கினை ஒன்றுக்கொன்று தொடர்புடைய சிறு சிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அவை எளிதான நேர விரையமில்லாத வகையில் செய்து முடிக்குமாறு இருக்க வேண்டும். அடுத்ததாக இலக்கை நோக்கிய உங்களது செயல்பாடுகளில் உங்களுக்கு உதவியும் ஆதரவும் தரக்கூடிய நபர்களை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். உங்கள் செயல்களின் மீதான நேர்மையான கருத்தை தெரிவிப்பவர், சரியான வழிகாட்டுதலை வழங்குபவர், உங்கள் செயல்பாடுகளில் ஏற்படும் சவால்களுக்கு துணை புரிபவர் போன்றோரை தேவைப்படும்போது தொடர்ச்சியாக அணுக வேண்டும்.

இலக்கை நோக்கிய உங்கள் பயணத்தில், ஒரு நேரத்தில் ஒரே செயலின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். செம்மையான செயல்பாடுகளின் மூலம் உங்களது இலக்கினை அடைந்துவிட்டீர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும்?. முதலில், உங்களுடைய செயலுக்கும் துணிவிற்கும் ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். சபாஷோடு அடுத்த சவாலுக்குத் தயாராகுங்கள். ஆம், பெற்ற வெற்றியோடு நின்றுவிடாதீர்கள் என்கிறார் ஆசிரியர். அடுத்த பெரிய இலக்கை தீர்மானித்து, அதற்கான பணியைத் தொடங்குங்கள். மீண்டும் மீண்டும் மேல்நோக்கி பயணிப்பதே நம்பிக்கை வலுப்பெறுவதற்கான வழி.

முன்னிலைப்படுத்த முயல்வோம்!

பெண்கள் தங்களை எந்தவொரு செயலுக்கும் முன்னிலைப்படுத்த தயாராகும்போது மட்டுமே அவர்களால் சிறந்த தலைமைப் பண்பினை பெற முடிகின்றது. உங்களின் சொற்கள், செயல்கள் மற்றும் தோற்றம் போன்ற வற்றின் மூலம் நீங்கள் உங்களை எவ்வாறு சித்தரிக்கின்றீர்கள் என்பதைப் பொருத்தே உங்களால் உங்களை சரியான முறையில் முன்னிலைப்படுத்த முடியும். மேலும், இதுவே உங்களின் மீதான மற்றவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், உங்களை பின்பற்ற அவர்கள் விரும்புவதற்கும் காரணமாக அமைகின்றது. இந்த முன்னிலைப்படுத்தும் பண்பானது புகழ்பெற்ற பல தலைவர்களிடையே இருப்பதை காண முடியும்.

வலிமையான தலைமைப் பண்பினை பெண்கள் பெறுவதற்கான சில விதிகளை சொல்லியிருகின்றார் ஆசிரியர். அவை: நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். சரியான செயல்களையே எப்போதும் செய்ய வேண்டும். சொற்களை விட செயல்பாடுகளே அதிக வலிமை வாய்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முதன்மையான விஷயங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எதுவாயினும் முதலில் செயலில் இறங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். குழுவாய் செயலாற்றும் நிலையில், நான் என்ற சொல்லை தள்ளிவைத்துவிட வேண்டும். உங்கள் செயலுக்கு ஆதரவளிப்போர் மற்றும் வழிகாட்டுவோர் ஆகியோரின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட கூடாது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் பண்பை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மரபுகளை களைந்தெறிய வேண்டும்.

கருத்துகளில் கவனம் வைப்போம்!

பொதுவாகவே ஒருவருடனான மோதல் போக்கினை யாரும் விரும்ப மாட்டோம் அல்லவா! ஆக, உங்கள் செயல்களில் எது தவறு என்பதை உங்களிடம் சொல்வதை விட, எது சரியான செயல்கள் என்பதை உங்களிடம் சொல்வதே மற்றவர் களுக்கு எளிதானது. உங்கள் செயல் பாட்டில் ஒரு தவறு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அதைப் பற்றிய கருத்தை நேர்மையாக யாரும் உங்களிடம் தெரிவிக்கவில்லை என்றால் நீங்கள் எப்படி அதை அறிந்து சரிசெய்துகொள்ள முடியும்?. இது போன்ற சூழ்நிலைகளில் நாமாகவே அவற்றை அறிந்துக்கொள்ள முயல வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

நேர்மையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதில் மிகப்பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தலைவர்கள் பலரும் உடன்படுகிறார்கள் என்று தெரிவிக்கின்றார் ஆசிரியர்.

முடிவெடுக்கும் தருணம்!

எவ்வளவோ வெளிப்புற காரணிகள் நமது செயல்பாட்டிற்கு துணை புரிந்தாலும், நம்முடைய உள்ளுணர்வு ஒரு கருத்தை நம்மிடம் சொல்லிக்கொண்டிருப்பதையும் கவனிக்க தவறக்கூடாது. பெரும்பாலான சூழ்நிலைகளில் நமது உள்ளுணர்வின் கருத்தே செயல்பாடாக மாறி நமக்கு ஊக்கமளிக்கின்றது. ஒரு சிக்கலில் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கும் நமக்கு, உள்ளுணர்வின் மீதான நம்பிக்கையே நமது அடுத்தகட்ட செயல்பாட்டிற்கு அடித்தளமாக அமைகின்றது. நாம் மேற்கொள்ள வேண்டிய எந்தவொரு முடிவானாலும் குறைந்தபட்சம் நான்கு விதமான தேர்வுகள் இருப்பதாக சொல்கிறார் ஆசிரியர். தொடர்ந்து அடுத்த நிலைக்கு முன்னேறிச்செல்வது, கவனமாக அடுத்த அடியை எடுத்துவைப்பது, செயல்படுவதற்காக காத்திருப்பது அல்லது சரியானது அல்ல என தீர்மானிப்பது.

பலம், பலவீனம், செயல்திறன் மற்றும் உள்ளுணர்வு ஆகியவையே பெண்களிடம் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான உந்துவிசையாகும். அவற்றை சரியாக உணர்ந்து செயலாற்றும்போது எப்படிப்பட்ட உயரங்களையும் பெண்களால் எட்டிப்பிடிக்க முடியும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x