

கரோனா வைரஸ் முதல் அலையைவிட கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஏற்பட்ட 2-வது அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர்.
ஆனால், தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்தபின் தற்போது கரோனா தொற்றின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும், குறிப்பாக சமூக விலகல், தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பல நாடுகளில் வீட்டில் இருந்து வேலைபார்க்கும் வசதியும் அதற்கான தேவையும் ஏற்பட்டது. உலக அளவில் பல நிறுவனங்களும் பணியாளர்களும் அதைக் கடைபிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்தியாவில் கோவிட் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி எடுக்கும் வேகமும் அதிகரித்து வருவதால் இதன் தாக்கம் தொழில்துறையிலும் காணப்படுகிறது. நேர்மறையான எண்ணங்கள் தொழில் துறையில் ஏற்பட்டுள்ளது.
இதனால் கார்ப்பரேட் உலகம் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்து பணியாற்ற முழு பலத்துடன் தயாராகி வருகிறன. அதாவது வீட்டிலிருந்து வேலை என்ற கருத்து முடிவுக்கு வருகிறது. கணிசமான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்தன.
எனினும் நிறுவனங்களின் திட்டங்களில் சில மாறுபாடுகள் உள்ளன. நெஸ்லே இந்தியா, டாடா நுகர்வோர் தயாரிப்பு, ஆம்வே, டாபர், கோத்ரேஜ் போன்ற சில முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சில நாட்கள் வீட்டிலிருந்து வேலை, சில நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை என்ற அடிப்படையில் பணியாற்ற முடிவு செய்துள்ளன.
டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் தங்கள் நிறுவன ஊழியர்களில் 90 சதவீதம் பேரை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் அலுவலகங்களுக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் டிசிஎஸ் 2025-ம் ஆண்டுக்குள் 25 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முடிவை எடுத்துள்ளது. இவர்கள் சுழற்சி முறையிலும் பணியாற்றும் திட்டங்களின் அடிப்படையிலும் வீட்டில் இருந்து வேலை திட்டத்தில் தொடர்ந்து இருப்பர்.
இந்தநிலையில் லிங்க்ட்இன் நிறுவனம் கருத்துக் கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. அதில் பெரும்பாலான இந்திய தொழில் வல்லுநர்கள் சில நாட்கள் வீட்டில் இருந்து வேலை, சில நாட்கள் அலுவலகம் சென்று பணி என்ற மாதிரியை விரும்புகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையே சரியான சமநிலை ஏற்பட அனுமதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
லிங்க்ட்இன் நிறுவனம் கருத்துக் கணிப்பில் பங்கேற்று பதில் கூறியவர்கள் 10 பேரில் 9 பேர் இதுபோன்ற வீட்டில் பாதி, அலுவலகத்தில் பாதி என்ற வேலைமுறையை பெரிதும் விரும்புகின்றனர்.
இதுபோலவே டெல்லாய்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் 84 சதவிகித இந்தியர்கள் பாதுகாப்புடன் பணியிடங்களுக்குத் திரும்புவது நல்லது என்று கூறியுள்ளனர். பிரகாசமான எதிர்காலத்துக்கு இது அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்து வேலையை முடிவுக்கு கொண்டு வருவதை விரும்புகின்றனர். குறிப்பாக வங்கி, நிதித்துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதை விரும்புகின்றனர்.
மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் முதன்மையாக கோடக் மஹிந்திரா வங்கி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவிகித பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, யெஸ் வங்கி, டெலாய்ட் ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களில் 90 சதவிகித பணியாளர்களுடன் அலுவலகத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன. இரட்டை தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களில் 90 சதவிகிதம் பேரை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க தயாராகி வருவதாக கோடக் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் ரேணு சுட் கர்னாட் கூறுகையில் ‘‘எங்கள் அலுவலகங்கள் அனைத்தும் அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு ஏற்ப 100 சதவீத மனிதவளத்தில் வேலை செய்கின்றன.
தாய்மார்கள், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண் ஊழியர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள், நோயுற்றவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் ஊழியர்கள் ஆகியோர் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கிறோம். மற்றவர்கள் அலுவலகம் வந்து பணியாற்ற ஊக்குவிக்கிறோம்’’ எனக் கூறினார்.
விப்ரோ நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளவர்கள் கூட இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். மூத்த நிர்வாகிகள் வாரத்திற்கு இரண்டு முறை, திங்கள் மற்றும் வியாழக்கிழமை அலுவலகம் வந்து வேலை செய்கிறார்கள். மற்ற நாட்களில் வீடுகளில் இருந்து பணியாற்றுகிறார்கள். இதேநிலை நீடித்தால் விரைவில் பணி சூழல் மாறும் என நம்பலாம்.