Published : 20 Mar 2016 11:54 AM
Last Updated : 20 Mar 2016 11:54 AM

மூன்றாம் கட்ட தங்க பத்திரம் விற்பனை: 1,128 கிலோவுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை

சமீபத்தில் மத்திய அரசு மூன்றாம் கட்ட தங்க பத்திரங்களை வெளியிட்டது. இந்த முறை இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இந்த முறை 1,128 கிலோ தங்கத்துக்கு மட்டுமே விண்ணப் பங்கள் வந்துள்ளன. இதன் மதிப்பு 329 கோடி ரூபாயாகும். கடந்த முறை பரிந்துரையானதில் பாதி அளவுக்குத்தான் மூன்றாம் கட்ட தங்கப் பத்திரத்துக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதுவரை மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட தங்கப்பத்திர விற்பனையில் 4916.25 கிலோ தங்கம் பரிந்துரையானது. இதன் மதிப்பு 1,322 கோடி ரூபாயாகும். மூன்றாம் கட்ட தங்க பத்திர விற்பனை மார்ச் 8 முதல் 14 வரை நடந்தது.

64,000 விண்ணப்பங்கள்

நிதி அமைச்சக தகவல்படி 64,000 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதன் மூலம் 1,128 கிலோ தங்கம் பரிந்துரையானது. இதற்கான ஒதுக்கீடு மார்ச் 29-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.

எஸ்பிஐ, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் கணிசமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.

முதல் கட்ட தங்க விற்பனை நவம்பரில் வெளியிடப்பட்டது. அப்போது 915 கிலோ தங்கத்துக்கு பரிந்துரையானது. இரண்டாம் கட்ட தங்கப்பத்திரங்கள் ஜனவரியில் (18 முதல் 22 வரை) வெளியிடப்பட்டது. அதில் 2,872 கிலோவுக்கு பரிந்துரையானது. ஒரு நபர் நிதி ஆண்டில் அதிகபட்சம் 500 கிராம் தங்கம் வரை இதில் முதலீடு செய்ய முடியும்.

தங்க நாணய விற்பனையில் ஐஓபி

புதுடெல்லி

இந்திய அரசு வெளியிடும் தங்க நாணயங்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிடுகிறது. இந்த நாணயங்களை வெளியிடும் முதல் வங்கி இதுதான். இந்த தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக சக்கரமும், மறு பக்கத்தில் மகாத்மா காந்தி உருவப்படமும் இருக்கும். 5 கிராம், 10 கிராம் மற்றும் 20 கிராம் அடிப்படையில் இந்த நாணயங்கள் கிடைக்கும். கடந்த வருடம் நவம்பர் 5-ம் தேதி மத்திய அரசின் தங்க நாணய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தங்க சேமிப்புத் திட்டத்தில் மும்பை சித்தி விநாயகர் ஆலயம்

மும்பை

200 வருட பழமையான மும்பை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான தங்கத்தை நரேந்திர மோடியின் தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் வங்கியில் டெபாசிட் செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்த மாத இறுதிக்குள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை டெபாசிட் செய்ய வங்கி முடிவெடுத்துள்ளது.

இது பற்றி ஆலய நிர்வாகி கூறுகையில், எங்களிடம் உள்ள 160 கிலோ தங்கத்தில் 44 கிலோ முதலீடு செய்ய இருக்கிறோம். இதற்கான வங்கியை விரைவில் தேர்வு செய்வோம் என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் கோயில்களில் மற்றும் வீடுகளில் உள்ள தங்க நகைகளை தங்க சேமிப்புத் திட்டத்தின் கீழ் வங்கியில் டெபாசிட் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 20,000 டன் என்று இலக்கு வைத்து இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் நான்கு மாத காலத்தில் வெறும் மூன்று டன் தங்கம் மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x