Published : 22 Sep 2021 07:35 PM
Last Updated : 22 Sep 2021 07:35 PM

கரோனா பாதிப்பு பின்விளைவு; சொந்த வீடு வாங்குவதில் மக்கள் ஆர்வம்: ஜேஎல்எல், ரூஃப் அண்ட் புளோர் நிறுவன ஆய்வு தகவல்

மும்பை

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வீடு வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். இரண்டாவது சொத்தாக வீடு வாங்குவது மற்றும் வாடகைக்கு விடுவது ஆகியவற்றுக்காக வீடு வாங்குவோர் எண்ணிக்கை இதில் மிகக் குறைவு. தாங்கள் குடியேறி வாழ வேண்டும் என்பதற்காக வீடு வாங்குவோர் எண்ணிக்கை 89 சதவீதமாக உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜேஎல்எல் நிறுவனமும், ரூஃப் அண்ட் புளோர் நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. அதில் முக்கியமான அம்சங்கள் வருமாறு:

முதல் முறையாக வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அடுத்து தாங்கள் வாழும் வீட்டை விடப் பெரியதாக வாங்கி குடியேறுவோர் எண்ணிக்கை உள்ளது. தங்களிடம் உள்ள முதலீட்டை இரண்டாவது சொத்தாக மாற்றுவதற்காக வீடு வாங்கும் பழக்கம் உள்ளது. அதேசமயம் விடுமுறையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் சென்று கழிப்பதற்காக இரண்டாவதாக ஒரு வீடு வாங்குவோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

வீடு வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மும்பை எம்எம்ஆர், டெல்லி என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே ஆகிய 6 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2,500 பேரின் கருத்துகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கரோனா காலத்தில் வீட்டில் இருப்பது பெரும்பாலானோரின் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் வசிக்கும் வீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற நிலையை பலரிடம் உருவாக்கியுள்ளது. தாங்கள் வாழ ஒரு வீடு சொந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருவதால், வீடுகளில் முதலீடு செய்யும் போக்கு இப்பகுதியில் அதிகரித்துள்ளது.

தங்களுக்காக சொந்தமாக வீடு வாங்குவோரின் எண்ணிக்கை 80 சதவீதமாக உள்ளது. இதில் ரூ.75 லட்சம் மதிப்புக்குள் வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகம். கரோனா பாதிப்பு இந்த மனோநிலையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. புறநகர்ப் பகுதிகளுக்குக் குடியேறுவதற்கு மக்கள் தயக்கம் காட்டவில்லை. மாறாக பெரிய வீடு கிடைக்கிறது என்றால் மாறவும் தயாராக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளில் 3 படுக்கையறை வசதி கொண்ட வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. பால்கனி, கூடுதலாக ஒரு அறை - அதாவது வீட்டிலிருந்து வேலை செய்ய அல்லது ஆன்லைன் வகுப்புகளுக்கென ஒரு அறை இருப்பதை விரும்புவது தெரியவந்துள்ளது. மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்று கூடுதலாக ஒரு சிறிய அறை, பால்கனி உள்ளிட்ட வசதிகளைத் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்களில் 80 சதவீதம் பேர் அடுத்த 3 மாதங்களுக்குள் வீடு வாங்க முடிவு செய்துள்ளனர். இதனால் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல வீடு கட்டும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்களது வடிவமைப்பில் மாறுதல்களைச் செய்து அதிகபட்சமாக அவர்களைக் கவர நடவடிக்கை எடுத்து வருவதும் தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் குடியிருப்புகளுக்கான சந்தையில் ஸ்திரமற்ற நிலையும், எத்தகைய மாறுதல்களை செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வது என்பதும் சவாலாகவே உள்ளதாக ஜேஎல்எல் நிறுவன குடியிருப்பு சேவை நிர்வாக இயக்குநர் சிவா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. நிலைமை கட்டுக்குள் இருந்து வரும் சூழலில் வீடு வாங்கும் சந்தையானது படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகியுள்ளன. இதே சூழல் தொடரும்பட்சத்தில் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்ட முடியும் என்று ஜேஎல்எல் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் சமந்தக் தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்துறையில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அடிப்படை மாற்றங்களால் சிறிய மற்றும் முறைசாரா கட்டுமான நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறும் சூழலை உருவாக்கியுள்ளது. இதை கரோனா வைரஸ் பரவல் காலகட்டம் உறுதி செய்துவிட்டது. இதனால் சந்தையில் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரோனா பரவல் காலகட்டத்திலும் புதிய கட்டுமான திட்டங்களை பெரிய முன்னணி நிறுவனங்கள் மட்டுமே அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கரோனா ஊரடங்கு காலகட்டத்துக்கு முந்தைய சூழல் மற்றும் தற்போதைய வீடு வாங்கும் திறன் ஆகியன முழுவதுமாக மாறியுள்ளது. அடுத்து வரும் காலாண்டுகளில் ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியும் என்பதையே இப்போதைய கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. குடியிருப்புகளை வாங்குவோரின் சந்தையானது இக்கட்டான சூழலிலிருந்து மீண்டு தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி விரைவாக முன்னேறி வருகிறது என்று ரூஃப் அண்ட் புளோர் நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணசுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே மிகக் குறைந்த லாபம் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சந்தை விரிவடையும் சூழலில் நிறுவனங்களும் அதற்கேற்ப தங்களது லாப அளவைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகை, தள்ளுபடி வழங்கத் தயாராக உள்ளன. இவை அனைத்தும் வீடு வாங்குவோருக்கு சாதகமான அம்சங்களே. வீடு வாங்க வேண்டும் என்று நினைப்போர் அதைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற தருணம் இதுவே. அதைச் செயல்படுத்தும் நோக்கில் 80 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் வீடு வாங்குவது உறுதி என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாறிய மனப்போக்கு

அலுவலகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றுக்கு அருகில் வீடு இருக்க வேண்டும் என்ற மனோநிலை மாறிவிட்டது. பசுமையான சூழல், விஸ்தாரமான இடவசதி, சுகாதாரமான சூழல் ஆகியன கட்டாயம் இருக்க வேண்டும் என்று வீடு வாங்குவோர் கருதுகின்றனர். இதைக் கட்டுமான நிறுவனங்களும் உணர்ந்து அதற்கேற்ப தங்களது கட்டிட வடிவமைப்பை மாற்றி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் முடங்கியிருந்த ரியல் எஸ்டேட் சந்தை 2020 மூன்றாம் காலாண்டில் ஓரளவு திரும்பியது. ஆனால், கரோனா இரண்டாம் அலை பீதி காரணமாக மீண்டும் 2021 இரண்டாம் காலாண்டில் முடங்கிப் போனது. தற்போது இரண்டாம் காலாண்டில் புதிய கட்டுமான திட்ட அறிவிப்புகள் வெளியாயின. கரோனா பாதிப்பு எதிரொலியாக மாறிவரும் வாடிக்கையாளரின் மனப் போக்கிற்கு ஏற்ப கட்டுமான வடிவமைப்புகளையும், அதிக இடப்பரப்பு கொண்ட திட்டப் பணிகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் சூழலில், பல நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் 2021 இரண்டாம் காலாண்டில் இத்துறை வளர்ச்சியை எட்டும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

https://roofandfloor.thehindu.com/?utm_source=HinduTamil&utm_medium=Weblink&utm_campaign=JLLRAFReport

நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜேஎல்எல் நிறுவனம் ரியல் எஸ்டேட் சார்ந்த சேவை மற்றும் அது தொடர்பான முதலீட்டு ஆலோசனை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இந்து குழுமத்தின் அங்கமான ரூஃப் அண்ட் புளோர் நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் ஆன்லைன் மூலமான சேவை அளிப்பதில் முன்னணியில் திகழும் நிறுவனமாகும். 31 நகரங்களில் 140 பணியாளர்களுடன், மிகச் சிறந்த தொழில்நுட்பப் பின்னணியில் இந்நிறுவனம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x