ஸ்திரமான வளர்ச்சி இருக்கும்: சைரஸ் மிஸ்திரி நம்பிக்கை

ஸ்திரமான வளர்ச்சி இருக்கும்: சைரஸ் மிஸ்திரி நம்பிக்கை
Updated on
1 min read

இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-ஸின் ஆண்டு பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் டி.சி.எஸ். வளர்ச்சி 2015-ம் ஆண்டு ஸ்திரமானதாக இருக்கும் என்று டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரி தெரிவித்தார்.

கடந்த வருடம் நடந்த டி.சி.எஸ். ஆண்டு பொதுக்கூட்டத்தில் சைரஸ் மிஸ்திரி முதன் முதலில் கலந்துகொண்டார். ஆனால் அப்போது நாம் சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம். அந்த சவால்களை எதிர்நோக்குவதற்கு நம்மால் முடிந்த விஷயங்களை செய்ய வேண்டும் என்று எச்சரிக்கையாக பேசினார்.

ஆனால் இந்த கூட்டத்தில் நம்பிக்கையாக பேசி இருக்கிறார். ஐ.டி. துறையில் 8.8 சதவீத வளர்ச்சி இருக்கிறது. ஆனால் டி.சி.எஸ் 16 சதவீத அளவில் வளர்ச்சி அடைந்தது. இந்த துறைக்கும், டி.சி.எஸ். நிறுவனத்துக்குமான சவால்களை சந்திக்க டி.சி.எஸ். தயாராக இருக்கிறது என்றார்.

மேலும், மொபிலிட்டி, பிக் டேட்டா, கிளவுட் கம்யூட்டிங்க் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகிய புதிய டெக்னாலஜிகள் ஐ.டி. துறையை மொத்தமாக மாற்றும் என்றார். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா பசிபிக் ஆகிய பகுதிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் டி.சி.எஸ். முதலீடு செய்து வருகிறது என்றார்.

டி.சி.எஸ் ஐ.பி.ஓ. வெளியாகி 2015-ம் ஆண்டுடன் பத்து வருடங்கள் முடிவடைகிறது. இப்போதைக்கு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1340 கோடி டாலர்களாக இருக்கிறது. ஒரு பங்கின் மதிப்பு, முதலீட்டின் மீதான வருமானமும் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது என்றார் மிஸ்திரி.

டிசிஎஸ் நிறுவனம் டெலிவரி மையங்களில் அதிக முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வாடிக்கை யாளர்களிடம் சென்று சேர்ப்பிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறது என்று மிஸ்திரி குறிப்பிட்டார். டிசிஎஸ் நிறுவனம் மறு ஏலங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்று அவற்றை வெற்றிகரமாக பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இப்போது மேற்கொள்ளப்படும் பணிகளின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மறு ஏலங்களைப் பெறுவதில் டிசிஎஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in