

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட்டின் 25 வருடப் பங்களிப்பு குறித்துப் புத்தகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, டிவிஎஸ் நிறுவனம் இன்று (செப். 17) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், 'ஒரு அமைதிப் புரட்சி - ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட்டின் பயணம்' ('A Silent Revolution- The Journey of the Srinivasan Services Trust') என்ற தலைப்பிலான புத்தகமொன்றை வெளியிடுகிறார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாட்டு பிரிவான 'ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட்'டின் 25 ஆண்டுகால சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இப்புத்தகம் வெளிவர உள்ளது.
'ஒரு அமைதிப் புரட்சி - ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட்டின் பயணம்' என்ற தலைப்பில் இப்புத்தகத்தை ஸ்நிக்தா பருபுடி எழுதியிருக்கிறார். ஹார்ப்பர் காலின்ஸ் இப்புத்தகத்தை வெளியிடுகிறது. எஸ்எஸ்டியின் சமூகப் பங்களிப்பு பரிமாணத்தை விவரிக்கிறது. மேலும், சமூகப் பங்களிப்பை மேற்கொள்வதற்கு உத்வேகம் அளிப்பது எது? அதன் பணிகள் எவ்வாறு அர்த்தமுள்ளவையாக சமூக மாற்றங்களை உருவாக்கியுள்ளன? இதன் மூலம் பயனடைந்தவர்கள் வாழ்வில் என்னென்ன நேர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என விரிவாக அலசுகிறது இப்புத்தகம்.
இது தொடர்பாக, வேணு சீனிவாசன் கூறுகையில், ''இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எஸ்எஸ்டியை நிறுவியபோது, எங்கள் சமூகப் பணி எப்படி அமையும் என்பது குறித்து அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. நம்பிக்கையைத் தக்கவைத்தல், மதிப்பை உருவாக்குதல் மற்றும் சமூகத்துக்கு அவசியமான சேவைகளை வழங்குவது ஆகியவற்றை முன்னிறுத்தும் எங்களது நிறுவன வழிகாட்டும் அம்சங்களை மையமாகக் கொண்டு எங்களது அமைப்பு செயல்பட ஆரம்பித்தது.
சமூகத்தின் நிலையான வளர்ச்சியை சாத்தியப்படுத்துபவர்களாக இருக்க விரும்பினோம். இதையடுத்து, கிராமங்களில் எங்கள் சமூகச் செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே இருக்கும்போது, எங்களது பணிகள் மற்ற வணிகக் குழுக்களையும் இப்பணியில் ஈடுபட ஊக்குவிக்கும் என நம்புகிறேன். இதன் மூலம் தேவைப்படுவோருக்கு அவசியமான, சமூகப் பணிகளை இன்னும் பெருமளவில் மேற்கொள்ளமுடியும். நிலையான வளர்ச்சியை அவர்களுக்கும், சமூகத்திற்கும் வழங்க முடியும்'' எனத் தெரிவித்தார்.
புத்தகம் கிடைக்கும் வாய்ப்புகள்: அமேசானில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கும். க்ராஸ்வேர்ட் மற்றும் சப்னா பப்ளிகேஷன்ஸ் போன்ற முக்கிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்".
இவ்வாறு டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.