ஸ்விக்கி, ஸோமேட்டோவுக்கு ஜிஎஸ்டி வரி; ஓட்டல் உணவு விலை உயர்கிறது?

ஸ்விக்கி, ஸோமேட்டோவுக்கு ஜிஎஸ்டி வரி; ஓட்டல் உணவு விலை உயர்கிறது?
Updated on
1 min read

ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனங்களையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. அதில் இது சம்பந்தமாக முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை சரக்கு, சேவை வரிநடைமுறையின் கீழ் கொண்டுவரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோலவே ஓட்டல் உணவுகளை வீடுகளுக்கு சென்று சப்ளை செய்யும் சப்ளை நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரிமுறை உள்ளது. ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களும் இணையதள வர்த்தக ரீதியாகத்தான் இந்த பணிகளை செய்கின்றன.

ஏற்கெனவே ஓட்டல்களில் வாங்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. அதனை விநியோகம் என்ற சேவையை வழங்கும் நிறுவனங்கள் என்பதால் அதற்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் அந்த நிறுவனங்கள் சேவை என்ற கணக்கில் வரும் என்பதால் அதற்கு வரி வசூலிக்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

பெரும்பாலான நடுத்தர ஓட்டல்கள் இந்த வரிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிவிட்டு அவற்றை அரசுக்கு முறையாக கட்டுவது இல்லை.
2020- 2021 நிதியாண்டில் மட்டும் ஓட்டல்கள் இந்த வகையில் ரூ.2 ஆயிரம் கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்விக்கி, ஸோமேட்டோ மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறி மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஓட்டல்களில் முறையாக வரி வசூல் செய்வதற்கு ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்களையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாளை நடைபெறும் ஜிஎஸ்ட கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படவுள்ளது.

மேலும் இந்த உணவு சப்ளை நிறுவனங்கள் தங்கள் பில் முறைகளை கையாளும் சாப்ட்வேர்களில் மாற்றங்களை கொண்டு வரவும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்ய இருக்கிறது. உணவு சப்ளை நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க இருப்பதால் உணவு பொருட்கள் விலை உயர்வதற்கும் வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in