Last Updated : 26 Feb, 2016 03:35 PM

 

Published : 26 Feb 2016 03:35 PM
Last Updated : 26 Feb 2016 03:35 PM

நாட்டின் 2016-17-க்கான வளர்ச்சி 7 முதல் 7.5% - பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பீடு

2016-17 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7-ல் இருந்து 7.5% வரை இருக்கலாம் என்று பொருளாதார ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது அடுத்த 2 ஆண்டுகளில் 8% ஆக உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்த 2015-16 நிதியாண்டின் பொருளாதார ஆய்வில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் பொருளாதார சீர்த்திருத்தங்களை பொருளாதார ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

2015-16-ல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்த போதிலும், சவால்களுக்கு மத்தியிலும் “ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.9% என்பதை சாதிக்க முடியக் கூடியதே என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15-ன் பொருளாதார வளர்ச்சி 7.2% என்று இருந்துள்ள நிலையில் பொருளாதாரத்தில் நடப்பு நிதியாண்டில் 7.6% விரிவாக்கம் இருக்கும் என்றும் இது உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் உலகப் பொருளாதார நிலைமைகள் பலவீனமாக இருந்தால் அதனால் இந்திய பொருளாதார வளர்ச்சி ஓரளவுக்கு பாதிப்படையும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு நிலவரத்தைப் பொறுத்தவரையில் உயர் சம்பளப் பிரிவினரின் செலவீடுகள் அதிகரிப்பதாலும், 7-வது ஊதியக்குழு அமல் செய்யப்படுமானால் அரசு ஊழியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் நுகர்வு அதிகரிக்கலாம் என்றும் அதே போல் பருவமழை இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவதற்கு காரணங்களை இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை நீடித்தால் ஏற்றுமதி பாதிக்கப்படலாம், மேலும் எதிர்பார்ப்பிற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் நுகர்வு பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அனைத்தை விடவும் கவலையளிக்கக் கூடியது மேற்கூறிய இரண்டு காரணங்களோடு அந்த இரண்டு காரணங்களுமே சேர்ந்து நிகழ்ந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சவால் விடுக்கும் இன்னொரு அம்சம் பொதுத்துறை வங்கிகளின் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிநிலைமைகள். இதில் கோளாறுகள் ஏற்பட்டால் தனியார் முதலீட்டுக்கு பங்கம் ஏற்படும் இதனால் முழு அளவில் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் தாமதமடையும் என்று மேலும் இந்த ஆய்வறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையின் உறுதி:

உலக அளவில் நிதிச்சந்தைகளில் பெரும் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் இந்திய பங்குகள் ஓரளவுக்கு உறுதியாகவே சென்று கொண்டிருக்கின்றன. இதனால் முதலீடு செய்ய சிறந்த ஒரு நாடாக இந்தியா விளங்க வாய்ப்புள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இந்திய வங்கிகளின் சராசரி கடன்களின் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது. இதனால் ரூபாய் மதிப்பும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் அதன் பிறகான சந்தை நிலவரங்களினால் ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டது என்கிறது இந்த ஆய்வறிக்கை.

மூலதனச்சந்தைகளில் நிலவும் போக்குகளை கணக்கில் எடுத்து கொண்ட இந்த பொருளாதார ஆய்வு, 2015-16 நிதியாண்டில் டிசம்பர் வரை பொதுப்பங்கு வெளியீடுகள் கடந்த ஆண்டை ஒப்பு நோக்குகைகையில் அதிகரித்துள்ளது.

ஆய்வறிக்கையின் தகவல்களின் படி இந்தக் காலக்கட்டத்தில் 71 நிறுவனங்கள் ரூ.51,311 கோடி நிதியை பங்கு வெளியீட்டின் மூலம் சந்தையிலிருந்து திரட்டியுள்ளது. அதாவது இது 2014-15 நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.11,581 கோடியாக மட்டுமே இருந்தது. மேலும் பரஸ்பர நிதித்திட்டங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியும் இதே காலக்கட்டத்தில் ரூ.1,61,696 கோடியாக அதிகரித்துள்ளது.

2015-16 நிதியாண்டில் இது வரை இந்தியப் பங்குச்சந்தை மந்தமாகவே இருந்து வருகிறது. ஜனவரி 5, 2016 வரை பி.எஸ்.இ. குறியீடான சென்செக்ஸ் 8.5% சரிவு கண்டுள்ளது.

இந்தியச் சந்தையில் அயல்நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் நிகர முதலீடு 2015-ம் ஆண்டில் ரூ.63,663 கோடியாகக் குறைந்துள்ளது. இது 2014-ம் ஆண்டில் ரூ.2,56,213 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x