

சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. வட்டி விகிதங்கள் தற்போதைய நிலையிலே தொடரும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அறிவித்துள்ளார்.
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதமான ரெபோ விகிதம் 6.75 சதவீதம் என்ற நிலையிலே தொடர்கிறது. அதேபோல ரிவர்ஸ் ரெபோ விகிதமும் 7.75 சதவீதம் என்ற நிலையிலே தொடர்கிறது. ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவீதம் என்ற நிலையிலே தொடர் கிறது. கடந்த டிசம்பரிலும் வட்டி விகிதத்தில் எந்தவிதமாற்றமும் செய்யப்படவில்லை.
நாட்டின் பணவீக்கம் நிர்ண யம் செய்யப்பட்ட இலக்குக்கு அருகே இருப்பதால், வளர்ச்சியை ஊக்குவிக்க வரும்காலத்தில் ரெபோ விகிதம் குறைக்கப்படலாம் என்று சூசகமாக அறிவித்தார்.
பணவீக்கத்துக்கான இலக்கு நிர்ணயம் செய்த சமயத்தில் ஏழாவது ஊதிய குழுவின் பரிந் துரைகளை ரிசர்வ் வங்கி கணக் கில் எடுத்துக்கொள்ளவில்லை. 24 சதவீத ஊதிய உயர்வை மத்திய அரசு எப்படி கையாளப்போகிறது என்பதும் பணவீக்கத்தை நிர்ணயம் செய்யும் காரணியாக இருக்கும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது. பணவீக்கம் குறைவாக இருப்பது, நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பது, நிதி நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது ஆகிய காரணங்களால் பொருளா தாரம் நிலைத்தன்மையுடன் இருக் கிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும். அப்போதுதான் அடித்தளம் பலமாக இருக்கும். நீடித்த நிலையான வளர்ச்சியை அடைய முடியும்.
மத்திய அரசு அறிவித்த ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில், தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத் துவது மற்றும் ஸ்டார்ட் அப் நிறு வனங்களுக்கு உதவும் வகையில் சூழ்நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். உதாரணத்துக்கு வெளிநாட்டு வென்ச்சர் கேபிடல் நிதி திரட்டுவது, நடைமுறைகளை எளிதாக்குவது போன்றவை உருவாக்கப்படும்.
வளர்ச்சி/பணவீக்கம்
நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும் என்று முன்பே ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. இப்போது அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அடுத்த நிதி ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சி அடையும் என்றும் கணிக் கப்பட்டிருக்கிறது.
பருவமழை மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு ஆகிய காரணங்களால் சில்லரை பணவீக் கம் நடப்பு நிதி ஆண்டில் இறுதிக் குள் 5 சதவீதத்துக்குள் இருக்கும்.
வாராக்கடன்
வாராக்கடன் நிலைமை குறித்து வங்கிகள் மற்றும் மத்திய அரசி டம் பேசி வருகிறோம். திரும்ப வராத கடன்களை கண்டுபிடிக்க வேண்டும். இந்த கடன்களுக்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும். வங்கிகளின் வரவு செலவு கணக்கு வங்கி செயல்பாட் டின் உண்மையான முகத்தை காண்பிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையால் வங்கி களின் குறுகியகால லாப வரம்பு பாதிக்கப்படலாம் என்ற பயம் நிலவுகிறது. ஆனால் நடுத்தர காலத்தில் வங்கிகள் இதனால் பயனடையும். இதன் காரணமாக லாப வரம்பு குறையும் என்றோ, வளர்ச்சி குறையும் என்றோ நான் நினைக்கவில்லை.
அதே சமயத்தில் வங்கிகள் என்ன செய்யவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறவில்லை. இது குறித்து ரிசர்வ் வங்கி விவாதிக்கிற து. பல நிறுவனங்களின் அறிக்கை படி 150 கணக்குகள் வங்கித் துறைக்கு பாதகமாக இருக்கின்றன.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் அடுத்த கொள்கை அறிவிப்பு கூட்டம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி நடக்க இருக்கிறது.
இதற்கிடையே ரிசர்வ் வங்கி யின் முடிவு சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்பவே இருந்ததாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.