

தமிழகத்துக்கு 6- வது தவணையாக வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக ரூ.183.67 கோடியை மத்திய நிதி அமைச்சகம் விடுத்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வரிவருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வருவாயைக் காட்டிலும் செலவினங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்கநிதி வழங்க மத்திய அரசுக்கு 15வது நிதிக் குழு பரிந்துரைத்தது.
அதாவது 2021-22 நிதி ஆண்டில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான வருவாய் பகிர்வுக்குப் பின்னும் வருவாய் பற்றாக்குறைக்கு உள்ளாகும் 17 மாநிலங்களுக்கு மானியமாக ரூ.1,18,452 கோடி வழங்க 15வது நிதிக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அரசியல் சாசன சட்டத்தின்275வது பிரிவின் கீழ், வருவாய்பற்றாக்குறைக்கு உள்ளாகும் மாநிலங்களுக்கு இந்த மானியத்தை 12 மாத தவணைகளாக வழங்க நிதிக் குழு பரிந்துரைத்தது.
தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறை மானியம் பெற தகுதியுள்ள மாநிலங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்த மாநிலங்களின் வருவாய் மதிப்பீடுக்கும் அவற்றின் செலவுக்கும் இடையிலான இடைவெளிஅடிப்படையில் மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறை மானிய அளவை நிதிக் குழு முடிவு செய்து நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.
17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது.
நிதிக்குழுவின் இந்தப் பரிந்துரையின்படி 6-வது தவணையாக 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக நிதி அமைச்சகம் இன்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 6 வது தவணையாக ரூ. 183.67 கோடியை மத்திய நிதி அமைச்சகம் விடுத்துள்ளது.