

கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அந்நிய முதலீடு வெளியேறி உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 11,126 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது.
ஆனால் அதே சமயம் இந்திய கடன் சந்தையில் அந்நிய முதலீட் டாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த மாதத்தில் 2,313 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவது இப்போதுதான். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 16,877 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு வெளியேறியது. கடந்த வருடம் 17,806 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்தது.
சந்தை மதிப்பு உயர்வு
சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 10 இடங்களில் இருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.02 லட்சம் கோடி அளவுக்கு கடந்த வாரம் உயர்ந்தது. டிசிஎஸ் மற்றும் சன்பார்மா ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு கூடுதலாக உயர்ந்துள்ளது. சன்பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19,962 கோடியும், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ18,906 கோடியும் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ 10,074 கோடி, ஹெச்யூஎல் ரூ 9,575 கோடி அள வுக்கு உயர்ந்துள்ளது.