

ஜூவல் ஒன் ’நிர்ஜரா’ எனும் புதிய வைர நகை கலெக்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனம் இப்புதிய வைர நகை கலெக்ஷனை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
நீர் வீழ்ச்சி அழகை அடிப்படையாகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இப்புதிய கலெக்ஷனுக்கு நிர்ஜரா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
புதிய வைர நகை லோகோவையும், கலெக்ஷனையும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.சீனிவாசன், தலைமைச் செயல் அதிகாரி என்.வைத்தீஸ்வரன் மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள ஜூவல் ஒன் கிளையில் அறிமுகம் செய்தனர்.
நகை வடிவமைப்பில் மிகவும் அனுபவம் மிக்கவர்களால் கலைநயத்துடன் இந்த வைர நகை கலெக்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை இயற்கை வைரக் கற்கள் பதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நகைகளை எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் கோவை நகரிலிருந்து உருவாகி இன்று ஆசியாவிலேயே மிக உயர்ந்த வைர நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழ்கிறது.
“ஆபரணங்கள் அணியும் மக்களின் வழக்கத்தில் மிகப் பெரிய மாறுதலை எங்களது எமரால்டு ஏற்படுத்தியுள்ளது. கலை நயமுடன் தொழில்நுட்பத்தையும் இணைத்து செயல்படுத்தி இத்துறையில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கியுள்ளோம். நகைகளின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் ஹால்மார்க் தரச்சான்றைக் கட்டாயமாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் முக்கியமானதாகும். இத்தொழிலில் ஈடுபடத் தொடங்கிய நாள் முதலாகத் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டு வந்துள்ளோம். எங்களது ஜூவல் ஒன் நகைகள், அறிமுகமான 2012ஆம் ஆண்டிலிருந்தே ஹால்மார்க் தரச் சான்றுடன் வெளிவருகிறது’’ என்று எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி நிறுவன நிர்வாக இயக்குநர் கே. சீனிவாசன், வைர நகை கலெக்ஷனை அறிமுகம் செய்து பேசுகையில் குறிப்பிட்டார்.
"இப்போது வெள்ளி நகை பிராண்டான ஜிலாரா (Zilara)-வை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்நகை வர்த்தகத்தில் சூப்பர் ஸ்டாகிஸ்ட்டுகள், ஸ்டாகிஸ்ட்டுகள் மற்றும் சில்லறை வர்த்தகர்களையும் புதிதாக இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். இது தவிர ஜூவல் ஒன் பிராண்டு நகைகளை, பிற நகைக் கடைகளில் விற்பனை செய்யும் முறையையும் மேற்கொண்டு அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.
“நீர்வீழ்ச்சியின் அழகை அடிப்படையாகக் கொண்டு இந்த பிரத்யேக வைர நகை கலெக்ஷன் நிர்ஜரா உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகையும் மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகையின் வடிவமைப்பும் இயற்கை அழகை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த நகைகள் பெண்களின் விருப்பத்தை அறிந்து வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஜூவல் ஒன் பிராண்ட் நகைகள் பெண்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்,’’ என்று செய்தியாளர்களிடம் பேசும்போது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.வைத்தீஸ்வரன் குறிப்பிட்டார்.
அந்த வரிசையில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் பெண்களின் தேர்வாக இது நிச்சயம் அமையும். அதை உணர்த்தும் வகையில் ‘உனது வாழ்க்கை - உனது தேடல்’ என்பதான கருப்பொருளைக் (Tagline) கொண்டு இதனை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்றைய தலைமுறை நவநாகரிகப் பெண்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக மட்டுமின்றி அவர்களது மன வலிமையையும், அழகையும் வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். எங்களது நிறுவனம் அண்மையில் ‘அயானா’ கலெக்ஷன் (Ayanaa Collection) என்ற பெயரில் மலர்களை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்திய தங்க நகை ஆபரணங்கள், பெண்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே வரிசையில் இந்த நிர்ஜரா வைர நகை கலெக்ஷனும் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
புதிய கலெக்ஷனில் நெக்லஸ், காதணி, மோதிரம், பென்டன்ட் ஆகியன 70 விதமான வடிவமைப்பில் வந்துள்ளன. இந்தத் தயாரிப்புகளின் விலை ரூ. 30 ஆயிரத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரையிலான விலையில் ஆபரணங்கள் கிடைக்கும்” என்றார்.
ஜூவல் ஒன், இப்புதிய கலெக்ஷனை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனது 14 விற்பனையகங்களில் அறிமுகம் செய்துள்ளது.