

தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,060 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது 35 சதவீதம் அதிகமாகும்.
நாட்டின் பொருளாதாரச் சூழல் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீட்சி நிலையை நோக்கி நகர்ந்து வருவதன் எதிரொலியாக கடந்த ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வசூல் மீண்டும் உயர்ந்து வருகிறது
இந்தியா முழுவதும் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 2-வது மாதமாக ஆகஸ்ட மாதத்திலும் ஜிஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,12,020 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.20,522 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடி.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.56,247 கோடி ( இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 26,884 கோடி உட்பட) மற்றும் மேல்வரி(செஸ்) ரூ.8,646 கோடி ( இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.646 கோடி உட்பட) ஆகும். 2021 ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய், கடந்தாண்டின் இதே கால ஜிஎஸ்டி வருவாயைவிட 30 சதவீதம் அதிகம்.
தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,060 கோடி. இது கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.5,245 கோடியாக இருந்தது. தற்போது 35 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
புதுச்சேரியின் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.156 கோடி. இது கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.137 கோடியாக இருந்தது. தற்போது 14 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.