Published : 18 Feb 2016 11:17 AM
Last Updated : 18 Feb 2016 11:17 AM

ஆறு ஆண்டுகளில் 50,000 கிமீ சாலைகள் அமைக்க திட்டம்

அடுத்த ஆறு ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் சாலைகளை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) திட்டமிட்டுள்ளது.

50,000 கிலோமீட்டர் சாலைகள் தேவை என்பதை கணித்துள்ளோம். இந்த திட்டங்களை மேற்கொள்ள 17 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று என்ஹெச்ஏஐ தலைவர் ராகவ் சந்திரா தெரிவித்தார். மும்பையில் நடந்த மேக் இன் இந்தியா மாநாட்டில் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது.

ஏற்கெனவே 7,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க விரிவாக அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரித்து வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் என்ஹெச்ஏஐ மட்டுமே 25,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாரத் மாலா, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களின் கீழ் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஆனால் 50,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட தனியார் துறையின் பங்களிப்பும் தேவைப்படும். தனியார் துறையின் பங்களிப்பு என்பது நிதித்தேவையில் மட்டுமல்லாமல், புதிய தொழில்நுட்பம், புதுமைகள், வடிவமைப்பு உள்ளிட்ட விஷயங்களிலும் தனியார் பங்களிப்பு தேவை.

தற்போது 240 திட்டங்கள் இறுதி செய்யப்படக்கூடிய நிலையில் உள்ளன. மேலும் மத்திய அரசு, இந்த துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. முக்கிய பிரச்சினையான நிலம் குறித்த விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி இருக்கிறது. இந்த துறையின் வளர்ச்சிக்கு இது முக்கியமானதாகும்.

இந்த வருடம் மட்டும் 9,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும் என்று தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x