

கடல் மார்க்கமாக வர்த்தகப் போக்குவரத்தை அதிகரித்தால் மட்டுமே குறைந்த விலையில் பொருட்களை சந்தைப்படுத்தி தொழிலில் வெற்றி பெற முடியும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கருமுத்து கண்ணன் வரவேற்றார். நிர்வாகிகள் பரத், ரமேஷ்கைமல், வாசு உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
பல்வேறு நாடுகளின் பொருளா தார வளர்ச்சி மோசமாக இருந் தாலும், இந்தியாவில் 7 சதவீதம் என நிலையான தன்மையுடன் வளர்ச்சி உள்ளது. இதை 8 சதவீதம் வரை அதிகரிக்கலாம். இதில் சிறு, குறு தொழில்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாட்டின் 40 சதவீத உற்பத்தியை இந்த நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் 6 ஆயிரம் வகையான பொருட்களை உற்பத்தி செய்வதுடன் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளன.
சீனா இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து வைத்து சந்தை யில் போட்டியிடுகிறது. பொருள் உற்பத்திச் செலவும், சந்தைக்கு வரும்போதும் அதன் விலையில் பெருமளவு வித்தியாசம் ஏற்படு கிறது. இது சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்ள பெரும் சவாலாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து செலவுதான். சாலை, விமானப் போக்குவரத்து மூலம் பொருட்களை எடுத்துச் செல்வதால் செலவு கணிசமாக அதிகரிக்கிறது. இதற்கு மாற்று கடல் மார்க்கப் போக்குவரத்துதான். இதற்காக அனைத்து துறைமுகங்களையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துறைமுகங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு எளிதாகப் பொருட்களை கொண்டு செல்ல தொழில் வழித்தடங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு உள்ள இணைப்பு வசதிகள், குளச்சல் துறைமுகம் வரை நீட்டிக்கப்படும். கிராமப்பகுதிகளிலும் நகரங் களுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் நகரங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இதுவே நல்ல வளர்ச்சியாக கருதப்படும்.
அம்ருத் நகர் மேம்பாட்டுத் திட்டத்தில் 36 நகரங்கள், ஸ்மார்ட் சிட்டியில் 12 நகரங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளதன் மூலம் தமிழகத்துக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.