

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே ஏற்ற தருணம். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் பின்னர் கிடைக்காது என்று சிஸ்கோ நிறுவனத்தின் செயல் தலைவர் ஜான் சேம்பர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் நடைபெறும் மேக் இன் இந்தியா வார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிஎன்என் ஆசிய வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியது:
18 மாதங்களுக்கு முன்பு நான் கூறியது இதுதான், முதலீடு செய்ய விரும்புவோர் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கூறினேன். தற்போது அதற்கான காலம் வெகுவாக கணிந்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் வியத்தகு வளர்ச்சியை இந்தியா அடைந்து வருகிறது என்று அவர் குறிப் பிட்டார்.
உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தொழில்நுட்ப அடிப்படையிலானவை. இன்று உள்ள நிறுவனங்களில் மாறிவரும் தொழில்நுட்பத்துக்கேற்ப தங் களை மேம்படுத்திக் கொள்ளா விட்டால் 40 சதவீத நிறுவனங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் அவை காணாமல் போய்விடும் என்று சுட்டிக் காட்டினார்.
மாறிவரும் தகவல் தொழில் நுட்ப உலகுக்கேற்ப இந்தியா மிக வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள அரசியல் சூழலைப் பற்றி கவலைப்படாமல் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சியை நோக்கி பாடுபடுகின்றனர். இன்னமும் இந்தியாவில் முதலீடு செய்யாத முதலீட்டாளர்கள் மிக அரிய வாய்ப்பை இழந்தவர்களாகின்றனர் என்றார்.
இந்தியாவில் முதலீடு செய்வது எளிது. இன்னும் சில காலங்களில் உற்பத்தித் துறையில் ஆசியாவின் கேந்திரமாக இந்தியா திகழும் என்று அவர் குறிப்பிட்டார். மின்னணு, உயர் தொழில்நுட்பம், பார்மா உள்ளிட்ட துறைகளில் சிஸ்கோ கவனம் செலுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த் ஒருங்கிணைப்பு (நெட்வொர்கிங்) நிறுவனமான சிஸ்கோ புணேயில் உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார். மற்றவர்களைப் பின்பற்றி இந்தியா செயல்படும் என்ற நிலை மாறி தனித்துவமிக்க வளர்ச்சிக்கான இடமாக இந்தியா உள்ளது. அதற்கான தலைமையும் உள்ளது என்றார்.