இந்தியாவில் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

இந்தியாவில் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
Updated on
2 min read

முழுக்க இந்தியாவில் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டீசல் எரிவாயு விலை உச்சத்தைத் தொட்டு வரும் வேளையில் பலரும் இதற்கான மாற்று என்ன என்று யோசித்து வருகின்றனர். எரிவாயு பயன்பாட்டையும் நாடாமல், அதே நேரம் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காமல் இருக்க மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கும் வாகனங்களே சரியானது என்று கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது.

மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்கப் பல்வேறு புதிய கொள்கைகளை, திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரபல வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் இருசக்கர வாகன சேவைகளைத் தரும் ஓலா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

ஓலா எஸ் 1 (S1) மற்றும் எஸ் 1 ப்ரோ (S1 Pro) என்ற இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன. 10 நிறங்களில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்கூட்டர்களில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் குரல் அடையாளம் கண்டு பதில் சொல்லுதல், தொடு திரை, சாவியின்றி பூட்டும் ப்ராக்ஸிமிடி லாக் வசதி, வாகனம் களவு போகாமல் தடுக்க எச்சரிக்கை செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஓலா எஸ் 1 மாடல் ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால் 121 கி.மீ. தூரமும், எஸ் 1 ப்ரோ மாடல் 181 கி.மீ. தூரம் வரையும் செல்லும். எஸ் 1 ப்ரோ அதிகபட்சமாக மணிக்கு 115 கி.மீ. வேகமும், எஸ் 1 மாடல் மணிக்கு 90 கி.மீ. வேகமும் கொடுக்கும். 18 நிமிடங்கள் துரித சார்ஜ் செய்கையில் இந்த இரண்டு மாடல்களுமே 75 கி.மீ. தூரம் வரை செல்லும்.

எலக்ட்ரிக் வாகனங்களில் சப்தம் வராது என்பதால் அதற்கு ஏற்றவாறு 4 வகை செயற்கை சப்தங்களை ஒலிக்க வைக்கும் வசதியும் இதில் உள்ளது. வண்டியை ஓட்டுபவர்களின் விருப்பதற்கு ஏற்ப இதில் ஒரு சப்தத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஓலாவின் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தித் தொழிற்சாலை, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 500 ஏக்கர்கள் நிலப்பரப்பில் இன்னும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தித் தொழிற்சாலை ஆகும்.

மானியங்கள்

மாநில அரசாங்கம் தரும் மானியம், பதிவு, காப்பீடு தொகைகள் சேர்க்கப்படாமல் ஓலா எஸ் 1 மாடல் விலை ரூ. 99,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ் 1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1,29,999.

அதே நேரம், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும், தயாரிப்புக்கும் இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு சலுகைகளை, மானியங்களைக் கொடுக்கிறது. உதாரணத்துக்கு டெல்லியில் அரசு மானியத்தோடு சேர்த்து ரூ.85,009க்கு ஓலா எஸ் 1 ஸ்கூட்டரை வாங்கலாம். அதே நேரம் குஜராத்தில் ரூ.79,000க்கே மானிய விலையில் கிடைக்கும். செப்டம்பர் 8, 2021 முதல் ஓலா எஸ் 1 மாடலின் அதிகாரபூர்வ விற்பனை தொடங்குகிறது.

இது உலகத்துக்காக, இந்தியாவில் உருவான புரட்சி என்று ஓலா எலக்ட்ரிக் வாகனப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத இறுதிக்குள் இந்தியா முழுவதும் 1000 நகரங்களில் விற்பனை தொடங்கப்பட்டிருக்கும் என்றும் பவிஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில், பெட்ரோலில் ஓடும் ஒரு இருசக்கர வாகனம் கூட இருக்காது என்கிற உறுதிமொழியைத் தாங்கள் எடுத்திருப்பதாகவும் பவிஷ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in