

உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்களில், பத்தில் மூன்று நிறுவனங்களில் நிர்வாக பதவிகளிலோ, உயர்மட்ட பதவிகளிலோ பெண்கள் இல்லை.
30 சதவீத பெண்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், ஆறு சதவீதம் அதிக லாபத்தைப் பெறுகின்றன என்கிறது ஆய்வு.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச பொருளியல் கல்விக்கான பீட்டர்சன் நிறுவனம் மெக்ஸிகோவில் இருந்து நார்வே, இத்தாலி வரை உலகம் முழுக்க இருக்கும் 91 நாடுகளில் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு குறித்துப் பேசிய அதன் ஆசிரியர்களில் ஒருவரான டெய்லர் மோரான், 'திறமை வாய்ந்த பெண் தலைவர்களை ஒதுக்கும் நிலை, உண்மையிலேயே தவறான உதாரணமாகும்' என்கிறார்.
தலைமைப் பதவியில் பெண்கள் என்பது குறித்த ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு:
* பெரு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பெண்களின் இருப்பு, ஒட்டுமொத்த நிறுவன வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது. பெண்கள் வேலைவாய்ப்பை, அவர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் கொள்கைகள் பாராட்டப்பட வேண்டும்.
* அதே சமயம், நிர்வாகப் பதவிகளில் இருக்கும் பெண்களின் திறமைக்கேற்ற அளவுக்கு, பெண் சி.ஈ.ஓ.க்களோ, செயற்குழுக்களில் இருக்கும் பெண்களோ கவனித்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
* தேசிய கொள்கையான குடும்ப விடுப்பு உள்ளிட்டவைகள் தேவைப்படும் பெண் மேலாளர்களை, எல்லா நிறுவனங்களும் ஒரே மாதிரியாக நடத்துவதில்லை.
* பெரிய அளவிலான நிறுவனங்கள் இப்போதுதான், பெண்களை உயரிய பதவிகளில் அமர்த்த ஆரம்பித்திருக்கின்றன.
* கீழ்நிலையில் உள்ள பெண் மேலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தாலும், இன்னும் முன்னேற்றம் தேவை. உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்களில், பத்தில் மூன்று நிறுவனங்களில் நிர்வாக பதவிகளிலோ, உயர்மட்ட பதவிகளிலோ பெண்கள் இல்லை.
இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு நிதியுதவி அளித்த நிறுவனம், தொழில்முறை சேவைகள் நிறுவனம் ஆகும். அதன் பெண் செய்தி தொடர்பாளர் கார்ன் ட்வரோனைட் ஆய்வு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில் "இந்த ஆய்வு, வெவ்வேறு பணி இடங்களின் முக்கியத் தேவை குறித்து விவாதித்திருக்கிறது. இனிமேலாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலைமைப் பொறுப்புகளில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்" என்றார்.