

பொறியியல் மாணவி ஒருவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனிடம் தோசை விலை ஏன் குறைவதில்லை? என்ற கேள்வியை எழுப்ப, அவரும் அதற்குப் பதில் அளித்தார்.
சனிக்கிழமையான நேற்று கொச்சியில் பெடரல் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரகுராம் ராஜனிடம், “நிஜ வாழ்க்கையில், தோசைகள் விலை பற்றிய கேள்வி எனக்கு இருக்கிறது. பணவீக்க விகிதம் அதிகரிக்கும் போது தோசை விலை அதிகரிக்கிறது, ஆனால் பணவீக்க விகிதம் குறையும் போது தோசை விலை ஏன் குறைவதில்லை? நம்முடைய தோசைக்கு என்னதான் ஆகிறது?” என்று பொறியியல் மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், “தோசை தயாரிப்பில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படவில்லை. இன்று வரை தோசை வார்ப்பவர் அதனை தவாவில் மாவை ஊற்றி வார்த்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் அங்கு ஏற்படவில்லை.
ஆனால் தோசை மாஸ்டருக்கு சம்பளம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, குறிப்பாக அதிக சம்பளம் கொடுக்கும் கேரளா போன்ற மாநிலங்களில் சம்பள விகிதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
எனவே வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்றால், சில துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகிறது, சில துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுவதில்லை. எனவே தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணையாத துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை வேகமாக அதிகரிக்கும்.
இதைத்தான் நாம் தோசை விலையிலும் பார்க்கிறோம்” என்றார் ரகுராம் ராஜன்.