

நாட்டில் வசதி படைத்தவர்கள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மானிய சலுகையைப் பெறுகின்றனர். இந்த அதிர்ச்சிகரமான தகவல் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசின் மானிய உதவிகள் ஏழை மக்களுக்குச் சென்றடைவதுதான் நோக்கம். ஆனால் பொதுவாக வழங்கப்படும் மானியத்தின் பலனில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பணக்காரர்களும், வசதி படைத்தவர்களும் அனுபவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இவ்விதம் செல்லும் மானி யத்தை சிறந்த நிதி நிர்வாகத்தின் மூலம் கட்டுப்படுத்தி செலவு களைக் குறைக்க முடியும்.
இந்தியாவின் நிதி உதவிகள் பொதுவாக ஏழைகளை மட்டும் சென்றடைவதில்லை. அரசின் உதவிகளில் பலனடைவோரில் வசதி படைத்தவர்களும் இருக்கின் றனர்.
வசதி படைத்தவர்களுக்கு உதவியானது சிறு சேமிப்புத் திட்டங்கள் மூலமாகவும் வரிச் சலுகை மூலமாகவும், மானிய உதவியாகவும் அதாவது 6 வெவ் வேறு வழிகளில் கிடைப்ப தாகக் குறிப்பிட்டுள்ளது. அரசின் சலுகைகளில் எரிவாயு சிலிண்டர், ரயில்வே துறை, மின்சாரம், விமான எரிபொருள் சலுகை, தங்கம் மற்றும் மண்ணெண்ணெய் இவற்றுக்கு அளிக்கப்படும் சலுகை களின் பலன்களை வசதி படைத்தவர்களும் அனுபவிக் கின்றனர்.
இத்தகைய திட்டங்களில் மானிய உதவி ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்த கைய வசதிகளைப் பெறுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்ல, அதிக வசதி படைத்தவர்களும் சலுகைகளைப் பெறுகின்றனர்.
இந்த குறைகளைக் கண்டறிந்து அவற்றைப் போக்குவது அரசின் பற்றாக் குறையைப் போக்க உதவும். அத்துடன் இவ்விதம் செல்லும் நிதியை வேறு நலத் திட்டங்களுக்கு அரசு திருப்பி பயன்படுத்த முடியும்.
கடந்த மாதம் வரி மற்றும் மானியம் தொடர்பாக தனது கருத்தை ஆணித் தரமாக பதிவு செய்த பிரதமர் மோடி, ஏழை மக்களுக்கு மானிய சலுகையும் பணக்காரர்களுக்கு வரிச் சலுகையும் அளிக்கப்படும் என்று கூறினார். விவசாயி மற்றும் ஏழைகளுக்கு அளிக்கப்படுவதை நிபுணர்களும் அரசு அதிகாரிகளும் பொதுவாக மானிய உதவி என்றழைக்கின்றனர். இதுவே தொழில் துறைக்கும், வர்த்தகத் துக்கும் அளிக்கப்படும்போது அது ஊக்கத் தொகை அல்லது வரிச் சலுகை எனப்படுகிறது. ஒரே விதமான உதவி இருவேறு விதமாக அழைக்கப்படுவது சரியா என நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் சலுகை மட்டும் மிகச் சரியானது என்கிற ரீதியில் சித்தரிக்கப்படுவது ஏன் என்று மோடி கேள்வியெழுப்பியிருந்தார்.
சமையல் எரிவாயு மூலம் ரூ. 40,151 கோடியும், மின்சாரம் மூலம் ரூ. 37,170 கோடியும், மண்ணெண்ணெய் மூலம் ரூ. 5,501 கோடியும், தங்கம் மூலம் ரூ. 4,093 கோடியும், ரயில்வே மூலம் ரூ. 3,671 கோடியும், விமான எரிபொருள் மூலம் ரூ. 762 கோடியும் சலுகையாக வசதி படைத்தவர்கள் பெறுகின்றனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது. பிபிஎப் மூலம் பெறும் வரிச் சலுகை ரூ. 11,900 கோடியாகும். இவை அனைத்தையும் சேர்த்தால் ரூ. 1,03,249 கோடி தொகையை வசதி படைத்தவர்கள் மானியமாக அரசிடமிருந்து பெறுகிறார்கள்.
பால் உற்பத்தியில் முதலிடம்
பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5 சதவீதம் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் வேளாண் உற்பத்தி கூட்டுறவு அமைப்புகளுடன் இணைந்ததாக உள்ளது. 2014-15-ம் ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 14.63 கோடி டன்னாகும். முந்தைய ஆண்டில் இது 13.76 கோடி டன்னாக இருந்தது.
பால் தனி நபர் நுகர்வு 1990-91-ம் ஆண்டில் 176 கிராமாக இருந்தது. தற்போது 322 கிராமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சராசரி அளவான 294 கிராமை விட இந்திய நுகர்வு அதிகமாக உள்ளது.
இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.