Last Updated : 19 Feb, 2016 09:41 AM

 

Published : 19 Feb 2016 09:41 AM
Last Updated : 19 Feb 2016 09:41 AM

மத்திய பட்ஜெட்- 7. மானியத்தின் மறுபக்கம்!

‘என்னதான் குடுக்கறதுன்னு இல்லையா...?'

‘எல்ல்லாத்தையும் ஓசியிலயே குடுத்தா எவன்தான் உழைச்சு சாப்பிடுவான்..?'

‘கூட வேணும்னாலும் வாங்கிக் குங்க... நல்லதா குடுங்கன்னுதான் கேட்கறோம்...'

‘இதெல்லாத்தையும் நிறுத்திட்டு, உருப்படியா எதாச்சும் பண்ணுங்க..'

புரிஞ்சுருக்குமே..?

‘இலவசம்', மானியம்.

2014-15 நிதி ஆண்டில், ரூ. 2,60,658 கோடி மானியத்துக்கே போனது.

(இது மத்திய அரசின் மானியம் மட்டுமே; மாநில அரசின் பங்கு தனி.)

சமீப காலத்தில் மிக அதிகமாகப் பேசப்படும் பொருளாதார ‘பிரச்சினை' இதுதான்.

மிகச் சரி. ஐயமே இல்லை. மானியம், இலவசம்... இதெல்லாம் கூடவே கூடாதுதான்.

ஆனால் ஒன்று கவனித்தீர்களா...?

மானியங்கள், இலவசங்கள் மோசம் என்று சொல்பவர்களில் அனேகமாக யாருமே, ஏழைகள், வறியவர்கள், விளிம்பு நிலை மனிதர்கள், பிளாட்பார வாசிகள் இல்லை.

அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ‘ஏழை பாழைங்க', அரை வயித்துக் கஞ்சியேனும் குடிச்சுட்டு உயிர் வாழறாங்கன்னா, அதுக்கு இந்த இலவசங்களும் மானியங்களும்தான் காரணம்.

எதற்காக, எவற்றையெல்லாம், யார்யாருக்கு இலவசங்கள் தரலாம் என்று விவாதம் வைத்தால், அதில் நியாயம் இருக்கும்.

இலவசங்களே வீண்..., மானியங்களே மோசம் என்று சொன்னால்...? மன்னிக்கவும்.

‘இவர்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறார்கள்'.

நம்து அரசாங்கத்தை, ‘நல அரசு' என்றுதான் நமது சாசனம் அறிவிக்கிறது. என்ன பொருள்...?

லாப-நட்டம் முக்கியமல்ல; ஒவ் வொருவரின் வாழ்வுக்கும் உத்தர வாதம் வேண்டும். அதற்கான அனைத் தையும் ‘நமது' அரசாங்கம் செய்யும் என்பதற்கான பிரகடனம்தான் இது.

இன்றும்கூட உலகின் பல நாடுகளில் பட்டினிச் சாவுகள் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவில்கூட சுமார் 60 ஆண்டு கள் வரை இந்த நிலை நீடித்தது.

இப்பொழுது...? இந்தக் கொடுமை, அனேகமாக முற்றிலும் நீங்கிவிட்டது.

‘இதற்கான விலையைக் கொடு... வாங்கிக் கொண்டு போ' என்று கண்டிப்பாக நிர்வகிப்பதற்கு, ஜனநாயகக் குடியரசு எதற்கு...?

மக்களின் ‘கஷ்ட நஷ்டத்துல பங்கு எடுத்துக்கணும்'. அதுதானே

மக்களாட்சிக்கு அழகு?

ஆனால், அதுவேதான் பல அறிவாளிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருக்கிறது.

‘பொது விநியோகத் திட்டம்' - வறியவர்களுக்கு உதவுகிற மானிய விலை விற்பனை அன்றி வேறென்ன..?

சமூகத்தில் அமைதியின்மை (social unrest) ஏற்படாமல் தடுக்கிற வல்லமை, மானியங்களுக்கும் இலவசங் களுக்கும் மட்டுமே உண்டு.

பொதுவாக இந்தியாவில் நிலவும் சமூக அமைதி, பல ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இல்லாததற்கும், கொந்தளிப்பான சூழல் நிலவுவதற்கும், அங்கேயெல்லாம் ‘நல' அரசுகள் இல்லை என்பதுதான் அடிப்படைக் காரணம்.

நன்றாக நினைவில் கொள்ள வேண் டும். அமெரிக்கா போன்ற மிக வளர்ந்த நாடுகள் கூட, கல்வியில், ஏனைய துறைகளில், தம் குடிமக்களுக்கு, இலவசம், மானியம் வழங்கத்தான் செய்கிறது.

‘கவலைப் படாதே. இதுவும் கடந்து போகும். நாளை உன் வாழ்வில் வசந்தம் வீசும்.

ஒளிமயமான எதிர்காலம் உனக் காகக் காத்திருக்கிறது..' என்றெல்லாம் எத்தனை நீளத்துக்கு சரடு விட்டாலும், ஏழைகளுக்கு நம்பிக்கை தருவது என்னவோ, ரேஷனில் கிடைக்கும் அரிசி, பருப்பு, பாமாயில்..... பண்டிகைக் கால இலவச வேட்டி, சேலை... இவைதாம்.

ஆனால் என்ன...? இந்த இலவசம், மானியத்தில் எவ்வளவு, உண்மையி லேயே தேவை உள்ளவர்களைச் சென்று சேர்கிறது..? புள்ளிவிவரங்களுடன், மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது ஆய்வறிக்கை.

ரயில்வேயின் மானியத்தில், 28.1% மட்டுமே, பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ள 80% மக்களை அடைந்தது.

குழப்புகிறதா...? எளிதாக இப்படிச் சொல்லலாம்: வருமானத்தின் அடிப் படையில், கீழே இருந்து தொடங்கி, 80% வரை உள்ள மக்கள் பெற்ற மானியத்தின் அளவு 28% அதாவது, மீதம் உள்ள 78% - வருமானத்தில் மேலே உள்ள 72% மக்களுக்கே பயன் தந்தது. மானியத்தின் பயனை அனுபவிப்பவர்கள் யார் என்பதற்காகச் சொல்லப் படுவது இது.

இதே கணக்கின்படி, அடி நிலையில் இருந்து 50% மக்கள், சமையல் எரிவாயு வின் 25% மானியமே பெறுகிறார்கள்.

ரேஷன் மண்ணெண்ணெயில், 46% மட்டுமே, ஏழைகளின் பயன் பாட்டுக்குச் செல்கிறது.

41% கசிவு (லீக்கேஜ்) (13% - வசதியானவர்களுக்கு)

யூரியா, பிற உரங்களுக்கான மானியத்தில் பெரும் பகுதி, அதன் உற்பத்தியாளர்களுக்கே செல்கிறது.

ரேஷன் அரிசியில் 15%, கோதுமை யில் 53% - ‘கசிவு' மூலம் வீண் ஆகிறது.

தண்ணீர் மானியத்தில் பெரும்பாலும் தனியார் குழாய்களுக்கே செல்கிறது.

ஏழைகள், பொதுக் குழாய்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

(ஆதாரம் - ஆய்வறிக்கை - அட்டவணை:3.1)

பல லட்சம் கோடிகள் மானியமாகத் தரப் படும்போது, அது உண்மையிலேயே தகுதியான, தேவையானவர்களுக்கு மட்டுமே சென்றடைவதாக இருக்க வேண்டும்.

இதனை உறுதி செய்வதற்கான எந்த வழிமுறையும் இல்லை. ஆனால், தற்போது கொண்டு வரப் பட்டுள்ள, ‘நேரடி பணப் பரிவர்த்தனை', மிகப் பெரிய அளவில், மோசடிகளைத் தவிர்க்க உதவும்.

இதுபோன்ற நடைமுறைச் சிக்கல் கள் தீரும் வரை, மானியம் தொடர்பான விவாதங்களும் நீளவே செய்யும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.

பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவ மனைகள்,

அரசுப் போக்கு வரத்துப் பேருந்து கள், ரயில்வே சேவை, நெடுஞ்சாலை வசதிகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நடத்தும் பள்ளிகள், தண்ணீர், மின்சாரம்... என்று அரசு அள்ளி வழங்கும் அத்தனை வசதிகளுமே ஏதோ ஒருவகையில் மானிய விலையில்தான் நமக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

இவை தொடரத்தான் வேண்டும். காரணம்...? மானியம் என்பது - மக்களாட்சியின் மனிதாபிமான முகம்.

இதுவரை நாம் பார்த்தது, மானியத்தின் ஒரு பக்கம் மட்டுமே.

இனி காண்போம் - இதன் மறு பக்கம். (மறு முகம்..?)

‘விட்டுக் கொடுத்த வருமானம்'.

- வளரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x