

தேசிய மருந்துகள் விலைக் கொள்கையால் 526 பிராண்ட் மருந்துகளின் விலை 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை, தேசிய மருந்துகள் விலைக் கொள்கை 2012 பரிந்துரைக்கிறது. மருந்துகள் துறையின் கீழ் செயல்படும், தேசிய மருந்துகள் விலை ஆணையம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சைக்கான திட்டமிடப்பட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பை நிர்ணயிக்கிறது.
திட்டமிடாத மருந்துகளின் விலையையும் கண்காணிக்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான, 42 திட்டமிடாத மருந்துகளின் விலைக்கு உச்சவரம்பை என்பிபிஏ நிர்ணயம் செய்துள்ளது. இந்த அணுகுமுறையால் 526 பிராண்ட் மருந்துகளின் விலை 90 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள மருந்துகளின் விலை மாற்றியமைக்கப்பட்டது, ஸ்டெண்டுகளின் விலை நிர்ணயம் ஆகியவற்றால் மக்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.12,500 கோடி அளவுக்கு சேமிப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் மருந்தகம் சுகம் செயலியில் 11.74 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இதில் மருந்துகளின் விலை விவரங்கள், மருந்துகளின் விலை ஒப்பீடு, அருகில் உள்ள மக்கள் மருந்தகங்கள் போன்றவற்றின் விவரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 13074 பேர் (4.8.2021 வரை) இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
2021-22ம் ஆண்டில், அக்டோபர் 31ம் தேதி வரை, டிஏபி மற்றும் என்பிகே உரங்களுக்கு கூடுதல் மானியமாக ரூ.14,775 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கு செயற்குழு ஒன்றை, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் தலைமையில் உரங்கள் துறை உருவாக்கியுள்ளது. உர மானியத்தை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கான சாத்தியங்களை இந்தக் குழு ஆராயும்.
இவ்வாறு அவர் கூறினார்.