Published : 09 Aug 2021 11:02 AM
Last Updated : 09 Aug 2021 11:02 AM

அமெரிக்காவின் எகுவிட்டி சொல்யூஷன்ஸ் சென்னையில் புதிய கிளை திறப்பு: 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு பிரகாசம்!

அமெரிக்காவைச் சேர்ந்த எகுவிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சென்னையில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. சென்னையில் உள்ள டிஎல்எஃப் சைபர் சிட்டி வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்நிறுவனத்தின்புதிய அலுவலகம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது.

எகுவிட்டி நிறுவனம் இணையத் தொடர்பு வசதி மூலம் எழுத்துப் பணி மற்றும் மொழி மாற்ற சேவைப் பணிகள் (Virtual Scribing), மருத்துவ ஆவணங்களைப் படியெடுத்தல், அவற்றைப் புதிதாக உருவாக்குதல் (Medical Transcription) மற்றும் மருத்துவக் குறியீடு எழுதும் பணி (Medical Coding Services) போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கஷ்யப் ஜோஷி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 200 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு ஆயிரம் பேர் உள்ள கிளை அலுவலகமாக இது செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார். மருத்துவம், சுகாதாரம் சார்ந்த சேவைப் பணிக்கான சந்தை ரூ.1.20 லட்சம் கோடி அளவுக்கு விரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திறன் மிகு பணியாளர்களை தங்கள் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகை உலுக்கிவரும் கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் கூட, தங்களது சேவைப் பணிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இத்துறையில் 45 ஆண்டு அனுபவம் உள்ள எகுவிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அலுவலகங்களை அமைத்துச் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x