

கச்சா எண்ணெய் விலை குறைவு, ஸ்டீல், சிமென்ட் ஆகியவற்றின் விலை குறைவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் அடிப்படை கட்டுமானத்தை மேம் படுத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
புதுடெல்லியில் நடந்த இந்தியா முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறிய தாவது: சர்வதேச மந்தநிலை காரணமாக இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தியாவின் பேரியல் பொருளாதாரம் என்பது நிலைத்தன்மை உடையது. தொடர்ந்து இதே நிலைமையில் இருக்கும்.
இந்த சவாலான காலகட்டத்தி லும் கூட கட்டுமானத்துறைக்கு சாதகமாக சூழ்நிலை உள்ளது. கச்சா எண்ணெய், ஸ்டீல், சிமென்ட் உள்ளிட்ட முக்கிய பொருள்களின் விலை குறைவாக இருப்பதினால் கட்டுமானம் செய்வதற்கான கட்டணம் குறையும். வருமான மும் உயரும். இந்த சூழ் நிலையை பயன்படுத்தி கட்டு மானத்துறையை மேம்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் பென்ஷன் மற்றும் வெல்த் பண்ட் நிர்வாகிகளிடம் பேசும் போது, இந்தியாவின் பேரியல் பொருளாதாரம் பலமாக இருக்கிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியவை கட்டுக்குள் உள்ளன. புறச்சூழல் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் சவால் உள்ளது.விரைவில் இந்திய பொருளாதார வளர்ச்சி உயரும்.
ரயில்வே, சாலை உள்ளிட்ட பொது திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவதில் அரசாங்கம் பெரிய இலக்குகளை வைத்திருக்கிறது என்று அர்விந்த் சுப்ரமணியன் கூறினார்.