Published : 05 Aug 2021 04:44 PM
Last Updated : 05 Aug 2021 04:44 PM

இளம் தலைமுறையினரை வெகுவாக ஈர்க்கும் வைர நகைகள்: தென்னிந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது டீ பீர்ஸ்

சென்னை

ஒரு காலத்தில் வைர நகைகள் பணக்காரர்கள் அணியும் ஆபரணமாக மட்டுமே இருந்து வந்தது. தற்போது இளம் தலைமுறையினர் மத்தியில் வைர நகைகள் அணியும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இளம் பெண்கள் அதிக அளவில் வைர நகைகளை விரும்பத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக உலகிலேயே பிரபலமான டீ பீர்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தைக் குறிப்பாக தென்னிந்தியாவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக டீ பீர்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் சச்சின் ஜெயின் கூறியதாவது:

"வைர ஆபரணங்கள் சிம்பிளாகவும் அதே சமயம் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக இப்போதைய இளம் தலைமுறையினர் கருதுகின்றனர். குறிப்பாக தென்னிந்தியாவில் தாங்கள் அணியும் ஆடைக்கு ஏற்ற வகையில் அதாவது ஜீன்ஸ், சுடிதார் உள்ளிட்ட அனைத்து நாகரிக உடைகளுக்கும் பொருந்தும் விதமாக வைர நகைகள் இருப்பதாலேயே பலரும் இதை விரும்பி வாங்குகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நிதி நிர்வாகத்தில் பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனர். இதனால் தங்களுக்குப் பிடித்தமான நகைகளை வாங்கி அணியும் போக்கும் அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக வைர ஆபரணங்கள் தங்களது சுதந்திரத் தன்மையை வெளிப்படுத்த உதவுவதாக அவர்கள் உணர்கின்றனர். இதுவும் வைர நகை விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

அனைத்துக்கும் மேலாக வைர நகை வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை நிலவுவதும் இதன் மீதான நம்பகத் தன்மை, மதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. மேலும் வைர நகைகள் மீது உத்தரவாதச் சான்று அளிக்கப்படுவதும், அதைத் திரும்ப வாங்கிக்கொள்ளும் பை-பேக் வசதி இருப்பதும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டீ பீர்ஸ் நிறுவனம் ஆபரணங்களுக்கென பார்எவர்மார்க் என்ற பிராண்டை 2011-ல் பிரபலப்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளில் இது மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற பிராண்டாக வளர்ந்துள்ளது.

டீ பீர்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 270 விற்பனையகங்களைக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவை தங்க நகை விற்பனையகங்களில் ஒரு பகுதியாக (ஷாப்-இன்-ஷாப்) அமைந்துள்ளது. இது தவிர 10 பிரத்யேக விற்பனையகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 2022-க்குள் 30 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 8 விற்பனையகங்கள் தென்னிந்தியாவில் அமைக்கப்படும்.

டீ பீர்ஸ் இந்தியா வர்த்தகத்தில் 45 சதவீதப் பங்களிப்பு தென்னிந்தியாவிலிருந்து கிடைக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே தென்னிந்தியாவில் மேலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையகங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் வைர நகை நுகர்வில் அமெரிக்கா (51%) முதலிடத்தில் உள்ளது. 18 சதவீத நுகர்வைக் கொண்டுள்ள சீனா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் வைர நகை நுகர்வு 7 சதவீதமாக உள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தை இந்தியா தொட்டுவிடும். இதில் பெருமளவு பங்களிப்பு தென்னிந்தியாவைச் சேர்ந்ததாக இருக்கும்".

இவ்வாறு சச்சின் ஜெயின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x