Last Updated : 17 Feb, 2016 09:51 AM

 

Published : 17 Feb 2016 09:51 AM
Last Updated : 17 Feb 2016 09:51 AM

மத்திய பட்ஜெட்- 5. நாளை மறுநாளும் நமதே!

‘அட.. நம்பவே முடியலை..! நேத்தைக்குதான் 'ஸ்கூல்'ல கொண்டு போய்ச் சேர்த்த மாதிரி இருக்குது...

இப்பொ கேட்டாக்கா, காலேஜுல படிக்கறேங்குறான்... நாளு, என்னவா ஓடுது...!'

இன்று சில நாடுகளில், ‘ஒரு நாள் போறதே, ஒரு யுகமாட்டம் இருக்குது.' இந்தியாவில்..? காலம் ‘பறக்குது'. இன்னும் ஒரு சில ஆண்டுகள்தாம். உலக இளைஞர்களின் தலைமைப் பீடத்தில் இந்தியா கம்பீரமாக வீற்றிருக்கப் போகிறது.

மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்...?

‘எல்லாருந்தான் படிச்சு பாஸ் பண்ணிட்டு வர்றாங்க.. அவங்க எல்லாருக் குமேவா, உடனே, நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சுடுது...? சிலருக்குதான்... அதெல்லாம் நல்லபடியா அமையுது. ஊம்... நமக்கெல்லாம் எங்கே...?'

இந்த மன வருத்தம் எதனால் ஏற்பட்டது...? சிலருக்கு மட்டும் ‘உடனே'. பலருக்கு....? ‘இதோ..' ‘அதோ..' என்று ஆண்டுக் கணக்கில் நீண்டு கொண்டே போகிறதே.... வேலையின்மை மட்டுமேதான் காரணமா..?

‘பணித் திறன்'. இங்கேதான் இடிக்கி றது. ‘பி.ஏ., எம்.ஏ. மாதிரி படிச்சுட்டு, வேலைக்கு சேர்ந்தா, அவங்களுக்கு பயிற்சி குடுக்கறதுல நியாயம் இருக்கு. ஏன்னா, இதெல்லாம் ‘அகடமிக் கோர்ஸ்'. தொழிற் கல்வி படிச்சுட்டு வந்தும், ‘ட்ரெய்னிங்' தேவைப்படுதுன்னா என்ன அர்த்தம்...? பணி அறிமுகம் தேவைப் படலாம். ஆனா பணிக்கான பயிற்சி...?'

‘நாட்களோ, வாரங்களோ கூட அல்ல; ஒரு சில மாதங்கள் வரை கூட பயிற்சி தேவைப்படுகிறது என்றால்...? கல்விமுறையில் கோளாறு; கற்பித்தலில் தவறு; கற்றுக் கொண்டதில் ஆழம் இன்மை அல்லது ஆர்வம் இன்மை. இன்ன பிற காரணங்கள். அனைத்தினும் முக்கியமான காரணி - ‘பணித் திறன் இன்மை'. இந்தியாவில் தற்போது, முறையான பணித் திறன் பயிற்சி பெற்றவர்கள் எத்தனை பேர்..?

சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைவு என்று கூடச் சொல்லக் கூடாது. ‘ஒண்ணுமே இல்லை' என்பதுதான் சரி. பாருங்களேன்... பணித்திறன் பெற்ற பணியாளர்களின் எண்ணிக்கை:

அமெரிக்கா - 52%, இங்கிலாந்து - 68%, ஜெர்மனி - 75%, ஜப்பான் - 80%, தென் கொரியா - 96%, இந்தியா - 4.69%!!!!!

2011 ‘சென்சஸ்' படி, 2022க்குள்ளாக நாம், 10.4 கோடி ‘புதியவர்களுக்கு', 29.8 கோடி ‘பணியாளர்களுக்கு' (தற்போது ஏதேனும் ஒரு பணியில் இருப்போர்) பயிற்சி தர வேண்டி உள்ளது.

மூச்சு முட்டுகிறதா...? உண்மை யிலேயே, இமாலயப் பணிதான்.

இந்தப் பிரச்சினையை அடையாளம் காண்பதில், முழு வீச்சுடன் எதிர்கொள்வதில் பொருளாதார அறிக்கையும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளும் நல்ல நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.

விளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சகத்தின் கீழ், திறன் மேம்பாடு மற்றும் சுய தொழில் முனைவுக்கு என்றே தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டுள்ளது.

2015-ல் ‘தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம்' (National Skill Development Mission) அமைக்கப்பட்டது.

திறன் மேம்பாட்டுக்காக செயல் படும் அரசுத் துறைகள், அமைப்புகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டன.

தொழில்நுட்பக் கல்வித் தர மேம்பாட்டுத் திட்டம், தேசிய திறன் தகுதி செயல் திட்டம், கிராமத்து ஏழை இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைப் பெருக்க தீன தயாள் கிராம கௌசல்ய திட்டம், மகளிரின் தலைமைப் பண்புகளை வளர்க்க, சிறுபான்மை சமுதாயத்து இளைஞர்களின் சுய வேலைத் திறனை மேம்படுத்த.... என்று பல்வேறு திட்டங்கள் செயல் வடிவம் பெற்று வருகின்றன.

‘பேச்செல்லாம் நல்லாதான் இருக்கு. பாட்டை எழுதும்போது கோட்டை விட்டுடு..' என்கிற ‘யதார்த்த நிலை', இந்தத் திட்டங்களில் இல்லை என்றுதான் இதுவரையிலான செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

இனி சொல்பவற்றை யாரும் தயவு செய்து பிரச்சார விளக்கமாகப் பார்க்க வேண்டாம்.

‘நடந்தது என்ன...?' என்கிற கேள்விக்கு பதிலாக மட்டுமே பார்ப்போம். கடந்த ஓராண்டில், இந்தியா முழுவதும், திறன் மேம்பாட்டுப் பணியில், 267 பயிற்சி நிறுவனங்கள் இணைந்துள்ளன; 4021 பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன; 65,46,251 பேர் பயிற்றுவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 26,92,168 பேர் பணியமர்த்தப்பட்டு விட்டனர்.

மைய அரசின் ‘திறன் மேம்பாட்டு இயக்கம்', தனது இணையத்தில் தந்து இருக்கும், அதிகாரபூர்வ தகவல் இது. ‘மேலும் விவரங்களுக்கு அணுகவும் - 088000555'. இதுவும் இணையம் சொல்வதே. மேற்சொன்னவைகளில் மிகப் பெரும்பான்மையானவை, நாட்டின் வட மேற்கு மாநிலங்களில் ‘மையம்' கொண்டுள்ளன. படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் பரவும் என்று நம்புவோம்.

‘2022-க்குள்ளாக 12 கோடி திறன் வாய்ந்த இளைஞர்கள் பணிக்குத் தேவைப் படுவார்கள்'. ‘கிராமத்து இளைஞிகளின் வேலைவாய்ப்பு அதிகம் வளர்ச்சி பெறவில்லை'. (நன்றாக கவனிக்கவும் - பணித்திறன் அல்ல; அவர்களுக்கான பணி வாய்ப்பு.) இதுபோன்று இன்னும் பல புள்ளி விவரங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறது ஆய்வறிக்கை.

ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், இனி நிச்சயம் தொடரும் என்று நாம் எதிர்பார்க்கும் செயல்பாடுகளும், இன்றைய இளைஞர்களை மட்டுமன்று; பள்ளிச் சிறுவர்களையும் ‘குறி வைத்து' இருப்பதை உணர முடிகிறது.

ஆகவே, ‘நாளை என்ன நாளை..? நாளை மறு நாளும் நமதுதான்' என்கிற திடமான நம்பிக்கை ஏற்படுகிறது.

ஒவ்வொரு அரசும் ஏதேனும் ஒரு மிக விருப்பமான பகுதி என்று ஒன்றை (‘pet subject') வைத்துக் கொண்டு செயல்படும். தற்போதைய மைய அரசின் ‘விருப்பப் பாடம்', இளைஞர்களின் திறன் மேம்பாடாகத் தெரிகிறது. இதனை அரசியல் கண்ணோட்டத்துடன் அல்லாது, பொருளாதாரப் பார்வையில் நோக்கும்போது, வரும் பட்ஜெட்டில், மேலும் பல சிறப்புத் திட்டங்கள் வெளியாகலாம். அதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

நிறைவாக ஒரு செய்தி. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். போன்ற குடிமைப் பணிகளைத் தவிர்த்து, ஏனைய பணியிடங்களுக்கு, ‘இன்டர்வியூ' எனப்படும் நேர்முகத் தேர்வு முறையை முற்றிலுமாக நீக்கி, கடந்த சுதந்திரத் தினத்தன்று அறிவிக்கப்பட்டது. கிராமத்து இளைஞர்களுக்கு இது மிகவும் நன்மை தரக் கூடியது.

‘இந்தத் திட்டம் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..?' உறுதியாக, சர்வ நிச்சயமாக, இவை போதவே போதா. மேலும் என்னவெல்லாம் செய்யலாம்...? குறிப்பாக, கிராமப்புற முதல் தலைமுறை பட்டதாரி இளைஞிகளுக்கு...?

பட்ஜெட் எதிர்பார்ப்பில் விரிவாகப் பார்ப்போம்.

அதிகம் கண்டுகொள்ளப்படாத, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னும் ஓரிரு துறைகளை ‘பார்த்து விட்டு' வரவிருக்கும் ஆய்வறிக்கை, பட்ஜெட்டுக்குள் நுழைவோம்.

என்ன பாவம் செய்தன - கிராமப் பஞ்சாயத்துகள்?

- வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x