

தண்ணீர் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வி.ஏ.டெக் வாபாக் நிறுவனம் முதல் முறையாக ரஷ்யாவில் உள்ள எண்ணெய், எரிவாயு ஆலையின் தண்ணீர் சுத்திகரிப்புப் பணிக்கான ஆர்டரைப் பெற்றுள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு 16.50 கோடி டாலர் (சுமார் ரூ.1,230 கோடி). இதன் மூலம் சர்வதேச அளவில் தனது பணிகளை விரிவுபடுத்தியுள்ளது வாபாக் நிறுவனம்.
ரஷ்யாவில் உள்ள அமுர் கேஸ் கெமிக்கல் காம்ப்ளெக்ஸ் எல்எல்சி நிறுவனம், சிபுர் ஹோல்டிங் ரஷ்யா மற்றும் சீனாவின் பெட்ரோலியம் அண்ட் கெமிக்கல் கார்ப்பரேஷன் (சினோபெக்) ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக ஏற்படுத்திய நிறுவனமாகும். இது உலகிலேயே மிக அதிக அளவிலான பாலிமர் உற்பத்தி ஆலையாகும்.
இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரைச் சுத்தப்படுத்துவது வாபாக் பணியாகும். அதாவது, தண்ணீரை ஆவியாக்கி கழிவுகளை திடக்கழிவுகளாக மாற்றி, ஒரு சொட்டு கழிவுநீர் கூட வெளியேறாத அளவுக்கு நீரை மறு சுழற்சி செய்யும் பணியை வாபாக் மேற்கொள்ளும். இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, தண்ணீர் நுகர்வும் குறையும். வழக்கமாக ஆலைக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவில் 25 சதவீதம் இதனால் சேமிக்கப்படும்.
இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, பொறியியல் நுட்பம், தேவையான கருவிகளை வாங்குவது, பணியாளர் நியமனம், மேற்பார்வை உள்ளிட்ட பணிகளை வாபாக் நிறுவனம் மேற்கொள்ளும். இயந்திரங்களை நிறுவுவது, அதைச் செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை நிறுவனம் மேற்கொள்ளும். கட்டுமானம், வடிவமைப்புப் பணிகளும் இதில் அடங்கும்.