

இந்த மாதம் 26 மற்றும் 27ம் தேதி சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்கவுள்ள ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி கலந்து கொள்ளமாட்டர் என தகவல்கள் கூறுகின்றன.
2016-17 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக ஜேட்லி ஜி20 கூட்டத்துக்கு செல்லவில்லை. மேலும் பட்ஜெட் டுக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. என்றாலும் நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தினேஷ் சர்மா இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என தெரிகிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016-17 பட்ஜெட் பணிகளில் நிதியமைச்சர் தீவிரமாக உள்ளதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசின் 2வது முழுமையான பட்ஜெட் 29 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 நாடுகளுக்கான கூட்டத்தை தற்போது சீனா நடத்துகிறது. ஜி20 நாடுகளின் மாநாடு ஹாங்ஸூ நகரில் செப்டம்பர் 4-5 தேதிகளில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பிற நாடுகளின் பிரதமர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள், ஏற்ற இறக்கமான பங்கு வர்த்தகம் மற்றும் நிதிச் சந்தை நிலைமைகள் குறித்து இந்த ஜி20 கூட்டத்தில் பேசப்படும் என தெரிகிறது. சர்வதேச செலாவணி நிதியத்தின் சமீபத்திய ஆய்வு வெளியீட்டின்படி, சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளது. சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 3.4 சதவீத பொருளாதார வளர்ச்சியே இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.