

நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது;
பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதனால் இந்த மசோதா விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதேபோல நேரடி வரி விதிப்பு முறையிலும் மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. சீர்திருத்தங்கள் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அதற்கு எல்லைகள் கிடையாது. அவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.
இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சாலைகள், ரயில்வே, நகர்புற மேம்பாடு, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு வாய்ப்புகள் உள்ளன. கடந்த 19 மாதங்களில் பாஜக அரசு முதலீடுகளுக்கான கதவுகளை திறந்துள்ளது.
கடந்த 19 மாதங்களில் வேகமாக முடிவெடுப்பது, சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட விஷயங்களில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழில் புரிவதற்கு ஏற்ற சூழலை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைந்து வருகிறது.
ஜிஎஸ்டி மட்டுமல்லாமல் திவால் சட்டமும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதற்கான வரைவினை தயார் செய்ய கூட்டுக்குழு பணியாற்றி வருகிறது. இந்த வரைவு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியது மட்டுமல்லாமல் தகுதி உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர் களிடம் தனித்தனியாகவும் பேச்சு நடத்தினார். ஐரோப்பிய முதலீட்டு வங்கிகள், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளின் முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.