Last Updated : 16 Feb, 2016 09:43 AM

 

Published : 16 Feb 2016 09:43 AM
Last Updated : 16 Feb 2016 09:43 AM

மத்திய பட்ஜெட்- 4. இளமை எனும் கடற்காற்று

இளைஞர்கள். திண்ணிய நெஞ்சும் தெளிந்த நல்லறிவும் கொண்ட, நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இன்னும் ஒருசில ஆண்டுகளில், உலகின் மிக ‘இளைய' தேசம் என்கிற சிறப்பு, மிகப் பழமை வாய்ந்த நம்மை வந்து அடைய இருக்கிறது.

மிகப் பழமையானதும் மிக இளமையானதும் ஒருசேர ஒரு நாடு. எந்தக் கதாசிரியனும் கற்பனைகூட செய்திராத வரலாற்றுத் திருப்பம். 2025-ம் ஆண்டு வாக்கில், உலகின் மொத்த ‘உழைக்கும் சக்தி'யில் 25% நம்மிடம்.

2020-ல், நம் நாட்டு மக்களின் சராசரி வயது 29 ஆக இருக்கும்! அமெரிக்கா, சீனாவில் சராசரி வயது - 37; மேற்கு ஐரோப்பாவில் - 45; ஜப்பானில்... - 48!! (பாகம் 2; அத்தி 09; பத்தி:9.3)

இதன் காரணமாக, உலகம் முழுவதும் 2020-ல், 5.6 கோடி இளைஞர்களுக்குத் ‘தட்டுப்பாடு' வரும் ; இந்தியாவிலோ, 4.7 கோடி இளைஞர்கள் கூடுதலாக இருப்பார்கள். தங்களின் ‘தேவைக்கு' உலக நாடுகள் யாரை எதிர் நோக்க வேண்டியிருக்கும் புரிகிறதா...? ஏன் உலக நாடுகள் மிரளுகின்றன... விளங்குகிறதா...?

இன்னும் சுமார் பத்தே ஆண்டுகளில் நம்மிடம், உழைக்கத் தயாராக இருக்கும் மிகப் பெரிய மக்கள் கூட்டம்.

வாழ்வின் தொடக்க காலத்தில் முழு உடல் தெம்புடன், அபாரமான மன வலிமையுடன், புதிதாய்ச் சிந்தித்து புதிதாய் எதையும் செய்யத் துடிக்கும் அடக்க முடியாத ஆர்வத்துடன்.... சுமார் 30 கோடி இளைஞர்கள்!

இந்தியா உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பூமிதான்!

‘இதெல்லாம் சரி... ஆனா, இப்போ இருக்கற ‘பசங்களுக்கு' என்ன தெரியும்னு நினைக்கறீங்க...? ‘அப்பல்லாம்' நாங்க ஏழாம் கிளாசும் எட்டாம் கிளாசும் படிச்சுட்டு பண்ண வேலையை, இன்னைக்கி வாயில நுழையாத படிப்பெல்லாம் படிச்சுட்டு வந்து, தப்புத் தப்பா பண்றானுங்க...'

பரவலாகக் கேட்கிற புலம்பல்தான். இது முழுக்கவும் பொய் இல்லை; முற்றிலும் உண்மையும் இல்லை.

நிதர்சனம் என்ன...?

‘இன்ஜினீயரிங்' முடித்தவர்கள் இருக்கிறார்கள்; இன்ஜினீயர்கள் இல்லை. மருத்துவம் படித்த வர்கள் இருக்கிறார்கள்; மருத்துவர்கள் இல்லை.

சட்டம் முடித்தவர்கள், பொருளாதாரம் கரைத்துக் குடித்தவர்கள், அறிவியல், தத்துவம், அரசியல்.. எல்லாத் துறைகளிலும் ‘அறிஞர்கள்' இருக்கிறார்கள். ஆனால் உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு நிபுணர்கள், மேதைகள், தலைவர்கள்...?

‘'சிறப்புப் படிப்பு' என்கிற பெயரில், ‘செங்குத்தான' அறிவுக்கு வழி வகுத்துவிட்டோம்; ‘அகன்ற' அறிவுக்கான பாதையை முற்றிலும் அடைத்துவிட்டோம்;

கல்வி விரிவடைந்தது; அறிவு சுருங்கிப் போனது.

விளைவு...? ‘வளம்' கொழிக்கிறது; விழுமியங்கள் தேய்ந்து கொண்டே இருக்கின்றன.

பொருளாதார ஆய்வறிக்கை, விழுமியங் களைப் பற்றியெல்லாம் ‘அலட்டிக் கொள்ளவே' இல்லை. திறமை பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் என்ன...? மிகவும் வெளிப்படையாக நேர்மையாக பல விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள், பொது வாழ்வில் ஈடுபட்டு இருப்போர்... அத்தனை பேரும் அவசியம் படித்தே ஆக வேண்டிய ஒரு பாகம் இது.

பல உண்மைகளை ‘புட்டுப் புட்டு' வைக்கிறது. தாராளமாக மனம் திறந்து பாராட்டலாம். நம் இளைஞர்களின் முன் உள்ள சவால்களையும், அவர்கள் சந்தித்தாக வேண்டிய பிரச்சினைகளையும் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டுவதில் அறிக்கை நூறு சதவீதம் வெற்றி கண்டு இருக்கிறது.

தற்போதைய பள்ளிக் கல்வியின் தரம் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களை அடுக்குகிறது அறிக்கை.

காரணம், இன்றைய பள்ளி மாணவர்கள்தானே அடுத்த 10 (அ)15 ஆண்டுகள் கழித்து, இளைஞர்களாக வெளிவர இருக்கிறார்கள்...?

அறிக்கை சுட்டிக் காட்டும் சில பட்டவர்த்தனமான உண்மைகள்: (பாகம் 2; பெட்டிச் செய்தி: 9.1)

அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிக்கு மாறும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2005-ல், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் - 16%. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இது, 50% ஐ தாண்டி விடும். அரசுப் பள்ளிகளில் நிலவும் மோசமான கற்பித்தலே இதற்குக் காரணம் என்கிறது அறிக்கை.

கிராமங்களிலும் இதே நிலைமைதானாம். கிராமத்து பஞ்சாயத்துப் பள்ளிகளில் படித்து, வென்று காட்டிய சென்ற தலைமுறையினருக்கு இதை விடவும் வருத்தம் தருகிற செய்தி இருக்கவே முடியாது.

2-ம் வகுப்புப் பாடத்தைப் பார்த்துப் படிக்கத் தெரிந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் - 48.1%

எளிய, இரண்டு இலக்க எண்களின் கழித்தல் தெரிந்த 3-ம் வகுப்பு சிறுவர்கள் - 25.3%

1 முதல் 9 வரை ஒற்றை இலக்கங்களை ‘அடையாளம்' காட்டத் தெரியாத 2-ம் வகுப்பு சிறுவர்கள் - 19.5%

தொடக்க, உயர் நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை - 71% (அதாவது 10-க்கு 3 பேர் பள்ளிக்கு வருவதில்லை)

இவை எல்லாமே 2014-ல், இந்தியா முழுவதும் 557 மாவட்டங்களில் 16,497 கிராமங்களில் 5,69,229 சிறுவர்களை ஆராய்ந்து கிடைத்த தகவல்கள். கல்வி, தொழில் நுட்பத்தில் நாம் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி வருவதாகப் பெருமையுடன் கூறிக் கொள்கிறோம். ஆனால், நம் மறு பக்கம் இப்படித்தான் இருக்கிறது.

சொல்லத் தேவையில்லை. கிராமங்களில் உள்ள விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள்தாம், மேலே குறிப்பிட்ட கல்வித் ‘தரத்தால்' மோசமாக பாதிக்கப்படுபவர்கள்.

கல்வியில், உலகத் தரத்தோடு ஒப்பிடுகையில் நாம் மிகவும் பின் தங்கி உள்ளோம்.

2009-ல் நடைபெற்ற ‘சர்வதேச மாணவர் மதிப்பீட்டு நிகழ்ச்சி'யில், இந்தியாவில் தமிழகம், இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

உலகம் முழுவதிலும் இருந்து, மொத்தம் 74 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இவற்றில், தமிழகம் பெற்ற ‘ரேங்க்' - 72; இமாச்சல் - 73. நமக்குப் பின்னால், கிர்கிஸ்தான் மட்டுமே 74-ம் இடத்தில்!

தரமான பள்ளிக் கல்விதான் திறமையான இளைஞர்களை உருவாக்கும். அதனால்தான் இத்தனை விரிவாகச் சொல்ல வேண்டி வருகிறது.

சரி.. ‘இன்றைய' இளைஞர்களின் நிலை என்ன...? தோராயமாக, 2% இளைஞர்கள் மட்டுமே, திறன் வாய்ந்த பணியாளர்கள். (skilled workers). 15 வயது ஆனவர்களில், 6.8% மட்டுமே, தொழிற் கல்வி பெறுகிறார்கள். ‘தொழிற் கல்வி' என்றதும், பொறியியல், மருத்துவம் என்று கருதிவிட வேண்டாம்.

‘வெல்டிங்', ‘ஃபிட்டர்', ‘எலக்ட்ரிஷியன்', ‘மோட்டார் மெக்கானிக்' போன்ற ஐ.டி.ஐ. வழங்கும் அடிப்படைத் தொழிற்கல்வி பயில்பவர்கள்தாம் அதிகம்.

‘எல்லாமே மோசம்', ‘எதுவுமே சரியில்லை' என்று சொல்லிவிட முடியாது.

வெளிச்சக் கீற்றுகள் நிரம்பவே இருக்கின்றன. ஆனால், பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை முன் வைப்பதுதான் பொருளாதார அறிக்கையின் நோக்கமாக இருக்க முடியும். அந்த வகையில் தனது ‘கடமை'யை மிகச் சரியாகச் செய்து இருக்கிறது.

சரி...., மேற்சொன்ன பிரச்சினைகள், சவால்களுக்கு தீர்வு / பதில்தான் என்ன...?

- வளரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x