

மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் வங்கி பங்குகளில் தங்களது முதலீட்டை இதுவரை இல்லாத அளவாக 48,419 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறார்கள். மே 31-ம் தேதி வரையில் இந்த தொகை முதலீடு செய்யப்பட்டிருப்பதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்ட்கள் நிர்வகிக்கும் பங்கு சார்ந்த முதலீடுகளில் வங்கி பங்குகளில் 21.59 சதவீதம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நான்காவது மாதமாக வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீடு செய்வது அதிகமாகி இருக்கிறது.
வங்கிப் பங்குகளுக்கு அடுத்து ஐ.டி துறை பங்குகளில் 22,986 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீடு செய்திருக்கின்றன. பார்மா துறை பங்குகளில் 15,027 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு டிசம்பர் 2012-ம் ஆண்டு வங்கிப்பங் குகளில் மியூச்சுவல் ஃபண்ட்கள் அதிகம் முதலீடு செய்திருந்தன. அப்போது 43,659 கோடி ரூபாய் வங்கிப்பங்குகளில் முதலீடு செய்யப்பட்டது.
2014-ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பில் வங்கிப் பங்குகளின் சதவீதம் 16.6 சதவீதமாக இருந்தது. மே மாத முடிவில் 21.59 சதவீதமாக இருக்கிறது.