

‘எலே... என்னலே.. தேடிக்கிட்டு இருக்கே...?'
‘ஒண்ணும் இல்லை அண்ணாச்சி... பத்து ரூவா நோட்டு... பிரிக்காம கத்தையா வச்சிருந்தேன்... காணலே...
அதான் தேடிக்கிட்டு இருக்கேன்....'
‘நல்லாத் தேடு... ஆமா..., இது என்ன...?'
‘இதுவா அண்ணாச்சி... ஆயிரம் ரூவா கட்டு... பேங்க்ல கொண்டு போடணும்...'
‘இதுல எவ்வளவு இருக்கு...?'
‘என்ன அண்ணாச்சி... தெரியாத மாதிரில்ல கேட்கறீங்க...? நூறு இருக்கும்'.
‘எண்ணிப் பார்த்தியா...?'
‘இல்லையே... இருங்க பார்க்கறேன்...'
‘அட என்ன அண்ணாச்சி இது...? தொன்னூறுதான் இருக்கு..?'
‘ஊம்... இதுக்குதான் சொன்னேன். பாரு.. நோட்டுக் கத்தை எங்கேயும் போயிராது, கிடைச்சுடும்.
அப்படியே போனாலும் எவ்வளவு...? ஆயிரம் ரூவாதான். ஆனா..., கத்தையில காணாமப் போச்சுதே...
அதுதான் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்... அதுவும் எவ்வளவு...? பத்தா யிரம் ரூவா!'
இலவசம்... மானியம்.. ரேஷன்.. இதற்கெல்லாம் பூமிக்கும் வானத்துக் குமாய்க் குதிக்கிறவர்கள்,
அவசியம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் - ‘விட்டுக் கொடுக்கப்பட்ட' வருவாய். (revenue foregone)
பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் போதெல் லாம், மிகப் பெரிய அளவில் நிபுணர் களால் விவாதிக்கப்படுவது இந்த அம்சம்தான்.
‘விட்டுக் கொடுக்கப்பட்ட' வருவாய் பற்றி, பல இட்டுக் கட்டப் பட்ட கதைகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
‘ஒரு சில ‘கார்ப்பரேட்' நிறுவனங்கள் பயன் அடைவதற்காக, அரசுக்கு நியாயமாக வர வேண்டிய வரிப் பணம் தியாகம் செய்யப்படுகிறது' என்பது தொடங்கி, ‘மக்களின் நன்மைக்கு, சுபிட்சமான நல்வாழ்வுக்காகவே இந்த நடவடிக்கை' என்பது வரை, ஆளாளுக்கு எழுதி, பேசித் தள்ளுகிறார்கள். யார் சொல்வது சரி...?
‘விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய்' என்றால்..?
வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வடிவங்களில், அரசு வரி வசூலிக்கிறது; நமக்குத் தெரியும்.
இதன் மீது இத்தனை சதவீதம் வரி என்று இருக்கிறது அல்லவா..?
சில காரணங்களுக்காக, இந்த வரி விகிதத்தைக் குறைத்து வசூலித்தல்; அல்லது, வரியில் இருந்து விலக்கு அளித்தல் என்கிற வழிமுறை பின்பற்றப்படுகிறது. இதனால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுவே, ‘விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய்'.
‘வரிச் செலவு' (tax expenditure) என்று வகைப்படுத்தப்படும் இந்த செலவினத்தின் மதிப்பு எவ்வளவு...?
நிதி ஆண்டு 2013-14 இல் - 57,793 கோடி ரூபாய். 2014-15 இல் - 62,398 கோடி!
அரசுக்கு வந்து இருக்க வேண்டிய வரி வருவாய்.
சலுகைகள் / விலக்கு என்கிற பெயரில் ‘விட்டுக் கொடுக்கப்பட்டு' விட்டது.
இதனால் பயன் அடைந்தவர்கள் யார்...? விவாதங்கள் தொடர்கின்றன.
மேற்சொன்ன சலுகையினால், 5,64,787 நிறுவனங்கள் பயன் பெற்றன.
இவற்றில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்கள் (units in Special Economic Zone) பெற்ற சலுகையின் மதிப்பு - ரூ. 18,393 கோடி. இவர்கள் ‘பெரு முதலாளிகள்' அல்லர்.
எரிசக்தி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ரூ. 9824 கோடி;
தாதுஎண்ணெய் & இயற்கை எரிவாயுவுக்கு - ரூ. 6742 கோடி.
"வரிச் செலவு ('விட்டுக் கொடுக்கப் பட்ட வருவாய்') என்று வகைப்படுத்தப் பட்டாலும், அவ்வத் துறைகளின் மேம் பாடுக்குப் பெரிதும் உதவுகிற வகையில் தான் வழங்கப்பட்டு இருக்கிறது".
அரசுத் தரப்பு விளக்கம் இது. மிக நிச்சயமாக, இந்த வாதத்தில் வலு இருக்கத்தான் செய்கிறது.
நிறுவனங்களும் தொழில் முதலீட்டாளர்களும் பெறும் இச்சலுகை காரணமாக,
முதலீடுகள் பெருகும்; தொழில் விரிவடையும்; புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
வர்த்தக - பொருளாதாரச் சூழல், சுறுசுறுப்பாக இயங்குவதற்கு சாதகமாக இருந்தால்தான், வளர்ச்சி சாத்தியம் ஆகும். இதற்கு, வரிச் சலுகைகள் மிகப் பெரிய அளவில் துணை புரிகின்றன.
நமக்கும் புரிகிறது. பிறகு, வலுவான எதிர்ப்பு ஏன் எழுகிறது..?
வரிச் சலுகையின் எத்தனை சதவீதம் யாருக்குப் போகிறது...?
இதுதான் பிரச்சினையின் மையப் புள்ளி.
மாதிரி கணக்கெடுப்பு (sample survey) ஒன்றின் முடிவு இது:
கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி விகிதம், வருமானத்தில் (சுமார்) 33%;
சலுகைகளுக்குப் பிறகு, கட்டியது என்னவோ 23% மட்டுமே.
(தோராயக் கணக்குதான்.) இந்த அளவுக்கு சலுகை நியாயம்தானா...?
தனி நபர்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, வீட்டுக் கடன். வங்கிகளில் கடன் வாங்கி, வீடு வாங்கியவர்கள்/ கட்டியவர்கள், வரிச் சலுகை பெறுகிறார்கள்.
இதுவும் ‘விட்டுக் கொடுக்கப்பட்டது'தான். இவர்கள் சாமான்யர்கள் அல்லவா..?
ஆம்.
சேமிப்பை ஊக்குவிக்க இதை விடவும் சிறந்த வழி உண்டா..?
இல்லைதான்.
ஆனாலும் ஒரு கேள்வி மிஞ்சுகிறது.
‘எப்படியோ கடனோ முடனோ வாங்கி வீடுன்னு ஒண்ணு வாங்கறாங்க.
அவங்களுக்கு சலுகை, வேண்டியதுதான். ஆனா..?
கடன்ல கூட வீடு முடியாதவங்க..? வரி கட்டித்தானே ஆவணும்...?
அது எப்படி சரியாவும்...? ‘இந்த' ரெண்டு பேர்ல, யாரு ‘சாமான்யர்கள்'?
இதே வினாதான் தொழில் முனைவோரிடமும் எழுகிறது.
சில குறிப்பிட்ட தொழில்கள், சில குறிப்பிட்ட இடங்களில் தொடங்கினால், வரிச் சலுகை என்றால்,
பிற தொழில்களில் இருப்போர்...? இவர்களாலும் வேலை வாய்ப்புகள் பெருகுகின்றனவே...!
‘நோக்கம்' பழுதில்லை. ‘மார்க்கம்' தெளிவாய் இல்லை. அதுதான் மிகப் பெரிய குறை.
அதுவும் இல்லாமல், இயல்பாகவே, மிக அதிக லாபம் ஈட்டுகிற முதலீட்டாளர்களுக்கு இந்த வழிமுறை, மிகப் பெரிய அளவில் வரிச்சலுகை வழங்குகிறது.
பொதுவாக, எந்தவொரு வரிச் சலுகையும், அதிக வசதி படைத்தவர் களுக்கே அதிக சாதகமாக அமைகிறது. இந்த நிலை நல்லதல்ல. சமூக நலனில் அக்கறை கொண்ட எவருக்கும் இப்படித்தான் தோன்றும்.
என்ன செய்யலாம்...?
வரிச் சலுகைகள் குறைக்கப்படலாம்.
சில சலுகைகள் விலக்கிக் கொள்ளப் படலாம்;
பதிலுக்கு, வரி விகிதம் குறைக்கப்படலாம்.
வரி விகிதம் அதிகமாக இருந்து, சிலருக்கு மட்டும் அதில் இருந்து விலக்கு அளிப்பதை விடவும்,
சீராக எல்லோருக்குமே வரி விகி தத்தைக் குறைப்பதே ஆரோக்கியமான வழி.
இப்போதுள்ள நடைமுறை...?
‘வரி என்னவோ 30%தான். ஆனா, இவங்க மட்டும் 20% குடுத்தாப் போதும்.'
விரைவில் இது மாறலாம்.
வரவிருக்கும் பொருளாதார ஆய் வறிக்கையில், இந்த வரி பேதம் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
சீரான வரி விகிதம் அறிவிக்கப்படலாம்.
எல்லாரும் நூற்றுக்கு நூறு சதம் ஏற்றுக் கொள்கிற எந்த வரி விதிப்பு முறையும் ஜனநாயக அமைப்பில் அநேகமாக சாத்தியம் இல்லைதான். ஆனால், இயன்றவரையில், சாமான்யர் களை வரிச்சுமை அதிகம் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வதே அனைவருக்கும் நன்மை பயக்கும். இதை நோக்கித்தான் அரசுகளும் பயணிக்கின்றன.
சரி. இதுவரை பார்த்தது சென்ற ஆண்டின் பொருளாதார அறிக்கை.
நிகழ்காலத்துக்கு வருவோம். இன்று என்ன நிலைமை..?
- வளரும்.