

ஹரியாணா மாநிலம் குர்காவ்ன் நகரில் வரும் மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு அம் மாநிலத்துக்கு கிடைக்கும் என ஹரியாணா முதல்வர் மனோகர் லால் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நேற்று சென்னையில் முதலீட் டாளர்களை சந்திக்க வந்திருந்த ஹரியாணா முதல்வர் மனோகர் லால் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது:
ஹரியாணா மாநிலம் குர்காவ் னில் மார்ச் 7, 8 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் உலகில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். நான் சீனா, ஜப்பான் ஆகிய நாடு களுக்கு நேரில் சென்று முதலீட் டாளர்களை சந்தித்து ஹரியாணா வில் தொழில் தொடங்க வருமாறு அழைத்துள்ளேன். ஜப்பானில் சுசூகி நிறுவனத்தின் தலைவரை சந்தித்தேன். அவர் ஹரியாணாவில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மாநில உயரதிகாரி களுடன் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தோம். நான் டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்துள் ளேன். அடுத்த கட்டமாக பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
ஹரியாணாவில் முன்பு இருந்த ஆட்சியின்போது ஊழல் தலைவிரித்து ஆடியது. இப்போது நிலைமை அப்படி இல்லை. ஊழலற்ற நிர்வாகம் தற்போது ஹரியாணாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு தொழில் தொடங்க தேவையான அமைதியான, இணக்கமான சூழல் நிலவுகிறது. இணையம் மூலம் தொழில் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய திட்டமிட்டுள்ளோம்.அதனால் காலதாமதம் மற்றும் ஊழல் என்கிற பேச்சுக்கு இடமிருக்காது.
ஹரியாணாவில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. இங்கு தொழில் தொடங்க வருபவர் களுக்கு குறைந்த விலையில் நிலம், வரிச்சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஹரியாணாவில் மாட்டிறைச்சி சாப்பிட தடை உள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என கூற முடியாது. இந்த சட்டம் ஹரியாணாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான கூட்டத்தில் இது குறித்து நான் மேலும் பேச விரும்பவில்லை.
ஹரியாணா விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலம். இங்குள்ள நிலங் களில் 17 சதவீத நிலம் மட்டுமே விவசாய நிலங்கள். மற்றவை விளை நிலங்கள் அல்ல. இந்த நிலங்கள்தான் தொழிற்சாலைகளுக்கு பயன் படுத்தப்படும். அதேசமயம் நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தில் அதிக மகசூல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் பெருகுவதால் விவசாய நிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தமிழகத்திலிருந்து ரூ.3 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்ய டிவிஎஸ், செயின்ட் கோபைன் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கிற வரவேற்பை பார்க்கும்போது இந்த இலக்கைவிட மிக அதிக முதலீடு கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலதிபர்களுக்கு அழைப்பு
ஹரியாணா மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு அம்மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம் தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்யுமாறும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஹரியாணா மாநில தொழில்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
“ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ரூ.10 கோடிக்கும் குறைவான தொகையில் தொழில் தொடங்கு வதற்கு மாநில தலைநகரம் வரத் தேவையில்லை. தொழில் தொடங்க விரும்பும் மாவட்டத்தின் ஆட்சியர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துக் கொடுப்பார். தொழில் தொடங்கு வதற்கான இடங்களை ஏ, பி, சி மற்றும் ‘டி’ என 4 மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளோம். இதில் மிகவும் பின்தங்கிய பகுதியான ‘டி’ மண்டலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக வரிச்சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும்.
ஹரியாணாவில் தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, ஜவுளி, உணவுப் பதப்படுத்தும் தொழில் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. சர்வதேச பயணிகள் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்து நிலையம் உள்ளது. கைதேர்ந்த பணியாளர்கள் உள்ளனர். மேலும், நாட்டின் தலைநகருக்கு அருகில் இம்மாநிலம் உள்ளதால் உலகின் அனைத்து நாடுகளுடன் எளிதில் தொடர்புக் கொள்ள வசதி உள்ளது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.