Published : 17 Feb 2016 10:09 AM
Last Updated : 17 Feb 2016 10:09 AM

ரூ.14,200 கோடி வரி பாக்கி: வோடபோனுக்கு வரித்துறையினர் கடிதம்

தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் ரூ.14,200 கோடி வரிபாக்கியை உடனடியாகச் செலுத்துமாறு வருமான வரித்துறையினர் நினைவூட்டுக் கடிதம் அனுப்பி யுள்ளனர்.

வரிபாக்கியை செலுத்த வில்லையெனில் சொத்துகளை பறிமுதல் செய்வதாகவும் வருமான வரித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

2007-ம் ஆண்டு ஹட்சிசன் வாம்பா நிறுவனத்தின் இந்திய தொலைதொடர்பு வர்த்தகத்தை 11 பில்லியன் டாலர்களுக்கு வோடபோன் வாங்கிய காலத்தி லிருந்து இந்த ரூ.14,200 கோடி வரிபாக்கி இருந்து வருகிறது என்பதை வருமான வரித்துறை யினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நோட்டீஸை உறுதி செய்த வோடபோன் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “வரித் துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில் வரிபாக்கியைச் செலுத்தவில்லையெனில் சொத்துகள் பறிமுதல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார். இந்த வரிநிலுவை விவகாரம்தான் தற்போது சர்வதேச தீர்ப்பாயத்திடம் உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.

ஹட்சிசன் நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பாக வரிநிலுவை இல்லை, காரணம் இதற்கான நடவடிக்கை இந்தியா வுக்கு வெளியே நடைபெற்றது என்று கூறுகிறது வோடபோன்.

ஆனால் வரிவிதிப்புத் துறையினர் என்ன கூறுவது என்னவென்றால், இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மூலம் இந்த நடவடிக்கைகளில் வோடபோன் பெரிய ஆதாயம் ஈட்டியது என்று வாதிடுகின்றனர்.

இது குறித்து வோடபோன் தனது அறிக்கை ஒன்றில், “2014-ம் ஆண்டு இந்திய அரசு கூறும்போது ஏற்கெனவே உள்ள வரிப்பிரச்சினைகள் ஏற்கெனவே உள்ள சட்ட நடைமுறைகள் மூலம் தீர்த்து வைக்கப்படும் என்று கூறியது. பிரதமர் மோடி அதிக வரிவிதிப்பற்ற ஒரு வர்த்தகச் சூழல் பற்றி உறுதி அளித்து வருகிறார், ஆனால் இந்த நோட்டீஸ் அதற்கு சற்றும் தொடர்புடையதாக இல்லை” என்று கூறியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று இந்தியாவில் தயாரிப்போம் வாரம் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “வரிவிதிப்பை பொறுத்தவரையில் நாங்கள் நிறைய திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். அதாவது முன்தேதியிட்ட வரிவிதிப்பு கிடையாது. இதனை நான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். மேலும் எங்கள் வரிவிதிப்பு திட்டங்களை ஸ்திரமானதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் அமைக்க பாடுபட்டு வருகிறோம்” என்று கூறியிருந்தார்.

முன்னதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வோடபோனுக்கு சாதகமாக வெளிவந்ததையடுத்து 2012-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வருமான வரி சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து முன்னோக்கிய வரிவிதிப்புக்கு சாதகமாகச் செய்தது.

வோடபோன் செலுத்த வேண்டிய வரித்தொகை ரூ.7,990 கோடி. ஆனால் வட்டி, அபராதம் ஆகியவை சேர்ந்து மொத்தமாக ரூ.20,000 கோடியில் வந்து தற்போது நிற்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x