

கடந்த இரண்டு வாரங்களில் மார்க்கெட்டிங் குறித்து பார்த்தோம். இவ்வாரம் கேஷ் ஃபுளோ –வை (cash flow) நிர்வகிப்பது குறித்துப் பார்ப்போம். பல தொழில்கள் வெற்றி அடையாமல் போவதற்கு முக்கியக் காரணம் கேஷ் ஃபுளோ-வை (பண வரத்தை) சரியாக நிர்வகிக்காததுதான்.
கேஷ் ஃபுளோ என்று நாம் எதைக் கூறுகிறோம்? நீங்கள் விற்பனை செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்திற்கு பணம் வருகிறது. அந்த விற்பனைக்காக பல செலவுகள் உங்களுக்கு இருக்கும். பொதுவாக தொழில்களில் விற்பனை அதிகமாகவும், செலவு அதைவிடக் குறைவாகவும் இருக்கும். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்தான் நமது லாபம்.
புதிதாக ஆரம்பிக்கும் தொழில்களில் இது சற்று உல்டாவாக இருக்கவும் வாய்ப்புள்ளது. உங்களது செலவு அதிகமாகவும் விற்பனை குறைவாகவும் இருக்கும். அது போன்ற சமயங்களில் உங்களின் தொழில், சில காலங்களுக்கு நஷ்டத்தில் நடந்து கொண்டிருக்கும். அச்சமயத்தில் தொழிலை சப்போர்ட் செய்வதற்கு நீங்கள் வெளியிலிருந்து பணம் கொண்டுவர வேண்டியதாக இருக்கும். தொழில் ஓரளவு ஸ்டார்ட் அப் நிலையில் இருந்து நிரந்தரமானவுடன், உங்களது பணத்தின் வரவு மற்றும் செலவு ஆகிய இரண்டும் கச்சிதமாக இருக்க வேண்டும்; அல்லது கையில் பணம் மிதக்க வேண்டும்.
அவ்வாறு கேஷ் ஃபுளோ சரியாக இல்லாவிட்டால், நீங்கள் கடனாளியாகி சீக்கிரமே தொழிலை மூடும் நிலைமைக்கு வந்து விடுவீர்கள். கேஷ் ஃபுளோ தொடர்ந்து மிகவும் டைட்டாக இருந்தால், நீங்கள் எங்கோ ஏதோ தப்பு செய்கிறீர்கள் என்று அர்த்தம். அந்தத் தப்பை உடனடியாக ஆராய்ந்து, அதற்கான தீர்வைக் கண்டுபிடியுங்கள்.
சரி அவ்வப்பொழுது ஏற்படும் இந்த கேஷ் ஃபுளோ பிரச்சினையை எவ்வாறு சமாளிக்கலாம்? சிறு தொழில் செய்யும் பலர் தாங்கள் வாங்கும் பொருட்களை ரொக்கம் கொடுத்தும், விற்கும் பொருட்களை கடன் கொடுத்தும் தொழில் செய்கிறார்கள். இதேபோல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தால் அவர்களுக்கு கேஷ் ஃபுளோ பிரச்சினை அதிகமாகிவிடும்.
அவர்கள் வாங்குமிடத்தில் கடனுக்கு வாங்க வேண்டும்; இல்லையென்றால் விற்பதை ரொக்கத்திற்கு விற்க வேண்டும். அல்லது வாங்குவது விற்பது இரண்டுமே ரொக்கத்திற்கு அல்லது கடனுக்கு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பொழுது, பிரச்சினைதான் தொடரும். ரொக்கம் கொடுத்து வாங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக ஓரிரு சதவிகிதம் டிஸ்கவுண்ட் கூட கொடுக்கலாம்.
அதேபோல் நீங்கள் வாங்குபவரிடம் உடனுக்குடன் கேஷ் கொடுத்தால், உங்களுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் உங்களின் லாப மார்ஜினும் அதிகமாகும்.
சிலர் தொழில் ஆரம்பித்த புதிதில் விளம்பரங்களுக்காக அதிகமாக செலவு செய்வார்கள். இன்னும் சிலர் தொழில் ஆரம்பிக்கும் பொழுதே அலுவலகம் போன்றவற்றிற்காக தடாலடியாக செலவு செய்வார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளிலும் பணச்சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஆகவே தொழில் ஆரம்பித்த புதிதில் செலவுகளை எவ்வளவு குறைவாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு குறைவாக செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும், நீங்கள் செய்யும் தொழிலின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை நினைவில் கொள்க!
பலருக்கு தொழில் லாபத்தில் நடந்தாலும், அவர்கள் கையில் போதுமான அளவு பணம் இருப்பதில்லை. உதாரணத்திற்கு அவர்கள் செலவுகளெல்லாம் மாதக் கடைசியில் இருக்கும்; அதே சமயம் அவர்கள் வரவுகள் மாத ஆரம்பத்தில் இருக்கும். அதுபோன்ற சமயத்தில் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். இதை எப்படிச் சமாளிக்கலாம்? உங்களுக்கு வரவு அதிகமாக இருக்கும் பொழுது, அதை எடுத்து மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள லிக்விட் ஃபண்டுகளில் போட்டுக் கொள்ளுங்கள்.
பிறகு தேவைப்படும்பொழுது சிறிது சிறிதாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இதை ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் நீங்கள் செய்து கொள்ளலாம். அதாவது மாத ஆரம்பத்தில் பணம் வந்தவுடன் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்துவிடுங்கள். மாதக் கடைசியில் தேவைப்படும் பொழுது எடுத்துக் கொள்ளுங்கள்.
அல்லது உங்களிடம் பணம் அபரிமிதமாக இருக்கும் பொழுது, அப்பணத்தை வங்கியில் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுக்கொள்ளுங்கள். அந்த டெபாசிட்டிற்கு எதிராக ஓவர் டிராஃப்ட் [over draft - (OD)] கணக்கைத் துவக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் போட்ட டெபாசிட்டில் 90% வரை நீங்கள் கடனாக பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் எடுக்கும் கடன் தொகைக்கு, எடுக்கும் நாட்களுக்கு, உங்கள் டெபாசிட்டைவிட 1 - 2% அதிகமாக வட்டி கட்ட வேண்டி இருக்கும். திருப்பி உங்களுக்கு பணம் வந்தவுடன் அப்பணத்தை ஓ.டி கணக்கில் கட்டி விடுங்கள்.
இவ்வாறாக உங்கள் பண பற்றாக்குறையை நீங்கள் குறைவான செலவில் நிர்வகித்துக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் திட்டமிட்டு செய்தால்தான் முடியும். இன்றைய தினத்தில் இவ்வாறு சரியாக திட்டமிடாமல் பல சிறிய தொழிலதிபர்கள் அதிக வட்டிக்கு பிரைவேட் நபர்களிடம் கடன் வாங்கி அவதிப்படுகிறார்கள். அந்நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொழுதுதான், உங்களுக்கும், உங்கள் வாடிக்கையாளர்களுக்கும், உங்கள் தொழிலுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நிம்மதி கிடைக்கும்!
கேஷ் ஃபுளோ என்பது, தொழிலுக்கு, நமது உயிர் மூச்சைப் போன்றது. மூச்சு நின்றுவிடாமல் பார்த்துக் கொள்வது நமது கடமையல்லவா?
prakala@gmail.com