

இந்த வாரத்தில் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கக் கூடும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரயில்வே பட்ஜெட், பொருளாதார ஆய்வறிக்கை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இந்த வாரம் நடக்க இருப்பதால் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கக் கூடும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
ரயில்வே பட்ஜெட் வரும் 25-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அந்த நாளில் ஸ்டீல், சிமென்ட், நிலக்கரி, இரும்புத்தாது உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிறுவனங் களின் பங்குகளில் மாற்றம் இருக்கலாம்.
நடப்பு பிப்ரவரி மாதத்தில் இதுவரை 4,600 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இதில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 4,503 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 96 கோடி ரூபாயும் வெளியேறி உள்ளது. நடப்பாண்டில் இதுவரை 13,414 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது.
கடந்த வாரம் சென்செக்ஸ் 723 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தது. முதல் பத்து இடங்களில் உள்ள நிறுவனங்களில் ஹெச்டிஎப்சியை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் சந்தை மதிப்பும் உயர்ந்தது. இதனால் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 75,585 கோடி ரூபாய் அளவு உயர்ந்தது.
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18,462 கோடி உயர்ந்தது. அடுத்து ஓ.என்.ஜி.சி.யின் சந்தை மதிப்பு ரூ.15,057 கோடி உயர்ந்தது.