

இந்தியாவில் டிராக்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சோனாலிகா நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 33,219 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 30.6 சதவீத வளர்ச்சியாகும்.
2020ஆம் ஆண்டு, கரோனா பெருந்தொற்றை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட முதல் ஊரடங்கில் இருந்து இந்தியா மீண்டு வந்ததை முன்னின்று வழிநடத்தியது, டிராக்டர் உற்பத்தித் தொழில்தான். தொடர்ந்து சோனாலிகா டிராக்டர்ஸ் தனது கூடுதல் விற்பனை மூலம், ஒட்டுமொத்த டிராக்டர் தொழில் துறையின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்தது.
அதனால், 2021-22ஆம் நிதியாண்டிலும் பல புதிய மாடல் டிராக்டர்களைச் சந்தையில் அறிமுகம் செய்ய சோனாலிகா திட்டமிட்டு வருவதாக நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
“தற்போது மத்திய அரசு நம் விவசாயிகளின் கரீப் பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 5% வரை அதிகரித்துள்ளது. அத்துடன் இவ்வாண்டின் பருவமழை குறித்து வெளியான கணிப்புகளும் நம்பிக்கை ஊட்டுவதாகவே உள்ளது. எனவே, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் வளமாக இருக்கும். தனிப்பட்ட ஒருவரின் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டதாக, நாங்கள் திட்டமிட்டுள்ள டிராக்டர்களுக்கான தேவையும் வரும் நாட்களில் அதிகரிக்கும். அதன் மூலம் வேளாண் வருவாயும் கணிசமாக உயரும்” என்று ரமன் மிட்டல் தெரிவித்தார்.