

அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து இன்றுடன் விலகுகிறார்.
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி தொடங்கப்பட்டது. அமேசான் நிறுவனத்தை சாதாரண புத்தகக்கடையாகச் தொடங்கி, அதன்பின்படிப்படியாக வளர்த்தி ஆன்-லைன் வர்த்தகத்தில் உச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஜெஃப் பெசோஸ்.
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியாக 27 ஆண்டுகள் செயல்பட்டு வந்த அவர் உலகின் பெரும் பணக்காரராக இருந்து வருகிறார். 57 வயதான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 16,700 கோடி டாலராகும். இந்திய மதிப்பில் ஏற்ககுறைய ரூ.13 லட்சம் கோடியாகும்.
அமேசான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெஃப் பெசோஸ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென அறிவித்தார். எனினும் அதற்குரிய தேதியை அவர் அறிவிக்காமல் இருந்து வந்தார். அமேசான் நிறுவப்பட்ட ஜூலை 5-ம் தேதி தான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெஃப் பெசோஸ் அண்மையில் தெரிவித்தார்.
ஜெஃப்பெசோஸுக்குப் பதிலாக, கடந்த 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிவரும் ஆன்டி ஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 5ம் தேதி பதவி ஏற்பார் எனவும் அமேசான் பங்குதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ஜெஃப் பெசோஸ் இன்று சிஇஓ பதவியில் இருந்து இன்றுடன் விலகுகிறார். ஆன்டி ஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கிறார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டி ஜேஸே, தற்போது அமேசானின் இணையவழிச் சேவைகளுக்கு பொறுப்பாக இருந்து வருகிறார். புதிதாகப் பொறுப்பேற்கும் ஆன்டி ஜேஸை அமேசினின் புதிய பொருட்கள், சேவைகள் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்த உள்ளார்.