தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்: அசோசேம் வலியுறுத்தல்

தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்: அசோசேம் வலியுறுத்தல்
Updated on
1 min read

தனி நபர் வருமான வரி வரம்பை ரூ. 4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்தை தொழில் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. தற்போது ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சமாக உள்ளது.

அதேபோல சேமிப்புகள் மற்றும் கல்விக்கான செலவு, மருத்துவ செலவுகளுக்கு அதிக வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. வரி விலக்கு தொடர்பாக அசோசேம் நடத்திய ஆய்வில் பலரும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும் என பெரும்பாலானோர் வலி யுறுத்தியுள்ளனர். இதை எதிர் வரும் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் நிதி அமைச்சகத் திடம் இந்த கோரிக்கையை அசோசேம் வலியுறுத்தி மனுவாக அளித்துள்ளது.

மருத்துவம், கல்வி உள்ளிடவற் றுக்கான செலவு அதிகரித்துவரும் நிலையில் இதற்கான உச்ச வரம்பு சலுகையையும் அதிகரிக்க வேண்டும் என்று அசோசேம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது மாத சம்பளம் பெறும் ஒருவர் அவரது குடும்பத்தினரின் மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரைதான் விலக்கு கோர முடிகிறது. இந்த அளவை ரூ. 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று அசோசேம் கேட்டுக் கொண்டுள்ளது. இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பா னது 1998-ம் ஆண்டு நிர்ணயிக் கப்பட்டதாகும். அதற்குப் பிறகு இது உயர்த்தப்படவேயில்லை என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விலக்கு பெற முடியும். இதுவும் 2008-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது என்றும் அசோசேம் சுட்டிக் காட்டி யுள்ளது.

மருத்துவக் காப்பீட்டில் மேலும் பலரும் இணைய வேண்டும் என்று அரசு விரும்பினால் இதற்கான வரம்பை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், புணே, சண்டீகர், டேராடூன் ஆகிய நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட மாதாந்திர சம்பளம் பெறுவோரிடம் அசேசம் கருத்து கேட்டு அதனடிப்படையில் அறிக்கை தயாரித்துள்ளது.

விடுமுறை கால பண ஈட்டுக்கு அளிக்கப்படும் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள வரம்பு 1988-ம் ஆண்டு முதல் தொடர்வதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்விக்கு அளிக் கப்படும் சலுகை மாதம் ரூ.100-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்த வேண்டும் என அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in