Published : 24 Feb 2016 09:29 AM
Last Updated : 24 Feb 2016 09:29 AM

விரிவாக்க நடவடிக்கையில் காளிமார்க்: ஆரோக்கிய பானங்களைத் தயாரிக்க திட்டம்

தென் தமிழகத்தில் உருவாகி நூற்றாண்டு விழா கொண்டாடும் காளிமார்க் நிறுவனம் ஆரோக்கிய பானங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

1916-ம் ஆண்டு விருதுநகரில் உள்ள விருதுபட்டி கிராமத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இக்குடும்ப நிறுவனத்தின் நான்காம் தலைமுறையினர் இந்நிறுவனத் தயாரிப்புகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக நடத்தி வருகின்றனர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விப்ரோ (VIBRO) என்ற பெயரிலான பன்னீர் சோடாவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கைகளில் சோடா தயாரித்து விற்பனை செய்த நிறுவனம் நூறாண்டுகளில் ரூ. 160 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவீன உற்பத்தி ஆலைகள் உள்ளன. உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், டின் கன்டெய்னர்களில் பானங்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேபிஆர் தனுஷ்கோடி தெரிவித்தார்.

இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டாக திகழ்வது பொவன்டோ. 60 ஆண்டுகளாக இது பிரபலமாகத் திகழ்கிறது. பழரச சோடாவான பொவன்டோ தற்போது ரூ. 150 கோடி முதலீட்டிலான ஆலையில் தயாராகி இளைஞர்களைக் கவரும் பானமாக வரப் போவதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் மட்டுமே பிரபலமாக உள்ள காளிமார்க் பிராண்டை தென் மாநிலங்களில் விரிவுபடுத்தவும் முதல் கட்டமாக ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பிரபலப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிறுவனம் ஆந்திர மாநில சிட்டியில் புதிய ஆலையை அமைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆலை அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 2017-ம் ஆண்டு உற்பத்தி யைத் தொடங்கும் இந்த ஆலை நாளொன் றுக்கு 600 பாட்டில்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்நிறுவனத்துக்கு 6 இடங்களில் ஆலைகள் இருந்தாலும் அவை அனைத்தும் உற்பத்தி செய்யும் அளவைக் காட்டிலும் புதிய ஆலையின் உற்பத்தி ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும்.

பழச்சாறு பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்லூரி வளாகங்கள் மற்றும் விற்பனை வளாகங்களில் தானியங்கி இயந்திரங்களை நிறுவும் திட்டமும் உள்ளதாகத் தெரிவித்தார்.

2018-ம் ஆண்டில் உடனடி ஸ்நாக்ஸ் தயாரிப்பில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ள தாகக் குறிப்பிட்டார். ஏற்றுமதி சந்தையின் தேவைக்காக கேன்களில் குளிர்பானங்களைத் தயாரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x