

இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியை அடுத்த பத்தாண்டுகளுக்கு அடையும்பட்சத்தில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலராக உயரும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
ஃபிக்கி அமைப்பின் 88-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய சின்ஹா இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.
இப்போது இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2 லட்சம் கோடி டாலராக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கு 7 சதவீத வளர்ச்சி அடையும் பட்சத்தில் பொருளாதாரத்தின் மதிப்பு 4 லட்சம் கோடி டாலராக உயரும். ரூபாய் மதிப்பு பலமடையும்பட்சத்தில் இந்திய பொருளாதாரத் தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலராக உயரும். இப்போது நாம் செய்து வரும் மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில் இதனை அடைய முடியும்.
நிதிப்பற்றாக்குறையை பொறுத்தவரை ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை நாம் அடைவோம். நடப்பு நிதி ஆண்டு மட்டுமல்லா மல் அடுத்த நிதி ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை இலக்கை நாம் அடைவோம். அடுத்த நிதி ஆண்டு நமக்கு சவாலானது. ஏழாவது ஊதிய குழு பரிந்துரை மற்றும் ஒரே பதவியில் இருப்பவர் களுக்கு ஒரே ஓய்வூதியம் ஆகியவை காரணமாக சவால்கள் இருக்கக் கூடும். தவிர விவசாயம் மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளின் செயல்பாடு கள் குறிப்பிடத்தகுந்த வகையில் இல்லை.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்துவருகிறோம். ஆனால் எதிர்க்கட்சியிட மிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.