அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 9.8 சதவீதமாக உயர்வு

அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 9.8 சதவீதமாக உயர்வு
Updated on
1 min read

கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத வகையில் அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி குறியீடு 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. தொழில்துறையின் இந்த வளர்ச்சி முக்கியமாக கவனிக்கப்படுகிறது. நவம்பர் மாத விழாக் காலங்களால், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 3.84 சதவீதத்தில் தொழில்துறை உற்பத்தி இருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு அக்டோ பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி மைனஸ் 2.7 சதவீதமாக இருந்தது.

உற்பத்தி துறை குறியீடு ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணியாகும்.

இந்த வளர்ச்சி குறித்து மூத்த பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறுகையில், அக்டோபர் மாத வளர்ச்சி ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இது பல நன்மைகளைக் கொண்டு வரும். ஆனால் இது தீபாவளி பண்டிகையின் தாக்கத்தினால் வந்துள்ளது எனவே கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்

தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (ஐஐபி) படி மின்சார உற்பத்தி 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சுரங்கத் தொழில் 4.7 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. இதை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செம்டம்பர் மற்றும் ஜூலை மாதங்களுக்கான திருத்தப் பட்ட புள்ளி விவரங்களையும் மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான திருத்தப்பட்ட புள்ளிவிவரத்தின் படி தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3.4 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான திருத்தப் பட்ட விவரங்களின் படி 4.1 சதவீதத்திலிருந்து 4.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 4.8 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது முதல் ஆறு மாதங்களில் 4 சதவீதமாக இருந்தது. 4.8 சதவீத வளர்ச்சி முந்தைய நிதியாண்டில் முதல் ஏழு மாதங்களில் இருந்த 2.2 சதவீத வளர்ச்சியை விட இருமடங்கு உயர்ந்துள்ளது.

17 துறைகள் வளர்ச்சி

ஒட்டுமொத்த அடிப்படையில் உற்பத்தி துறை 5.1 சதவீதம் வளர்ந்துள்ளது. மின்சார துறை 5.2 சதவீதம் விரிவடைந் துள்ளது.

இந்த புள்ளி விவரம், குறியீட்டின் அடிப்படையில் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மூலதன பொருட்களின் உற்பத்தி 16.1 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. மூலதன பொருட்கள் பிரிவு பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கிய தூண்டுகோலாக இருக்கிறது. நுகர்வோர் பொருட்கள் பிரிவு 18.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

அடிப்படை பொருட்கள் பிரிவு 4.1 சதவீதமும், இடைநிலை பொருட்கள் பிரிவு 6.7 சதவீதமும் வளர்ந்துள்ளது.

மொத்தத்தில் உற்பத்தி துறையை சார்ந்த 22 தொழில் துறை பிரிவுகளில் 17 துறைகள் வளர்ச்சி நிலையில் இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in