

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் விதமாக டாடா குழுமத்தின் அங்கமான இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் (ஐஹெச்சிஎல்) 10 லட்சம் உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளது.
கரோனாவுக்கு எதிராகத் தன்னலமற்ற சேவையாற்றும் மருத்துவப் பணியாளர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நிறுவனம் மொத்தம் 10 மாநிலங்களில் 12 நகரங்களில் சிறிய பங்களிப்பை அளித்துள்ளது என்று தாஜ் பொது சேவை அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
வர்த்தக நிறுவனமாக இருந்தாலும், தன்னைச் சமூகத்தின் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்வதன் மூலம்தான் அந்நிறுவன வர்த்தகம் அர்த்தமுள்ளதாக அமையும் என்ற டாடா நிறுவனர், ஜாம்ஷெட்ஜியின் கொள்கைக்கேற்ப கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு சத்துமிகு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருவதாக ஐஹெச்சிஎல் நிறுவன மனிதவளப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் கவுரவ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கரோனா முதல் அலையின்போது மருத்துவப் பணியாளர்கள் மட்டுமின்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவுப் பொட்டலங்களை இந்நிறுவனம் வழங்கியது. அப்போது 30 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.