

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து மேற் கொள்ளப்பட்ட பிரச்சாரத்தால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் இந்தியா மிகச் சிறந்த உற்பத்தி கேந்திரமாக மாறும். இந்ததிட்டத்தின் பலனாக முதலீடுகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மாநிலங்களவையில் நேற்று எழுத்துமூலமாக அளித்த பதிலில் அவர் இக்கருத்தை தெரிவித்தார். மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டின் முதலீடுகள் வருகை அதிகரித்துள்ளது. முதலீடு தொடர்பாக இருந்த சூழலை முற்றிலுமாக மாற்றியது இத்திட்டம்தான். நேரடி அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
உற்பத்தித் துறையில் சர்வதேச அளவில் இந்தியாவை உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்தான் மேக் இன் இந்தியா எனும் திட்டமாகும். நாட்டின் உற்பத்தித் துறையை முடுக்கிவிடுவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலத்தில் அந்நிய நேரடி முதலீடாக 3,287 கோடி டாலர் இந்தியாவுக்கு வந்துள்ளது.
அலைக்கற்றை
தொலைத் தொடர்புத் துறையில் மிக அதிக வருவாயை ஈட்டித் தரும் அலைக்கற்றை (ஸ்பெக்டரம்) ஏலம் விடுவது தொடர்பாக இன்னமும் தேதி முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மக்களவையில் இது தொடர்பாக நேற்று எழுத்து பூர்வமாக அளித்த விளக்கத்தில் அவர் கூறியது: அடுத்தகட்ட அலைக்கற்றை ஏலம் குறித்து இன்னமும் அரசு முடிவு செய்யவில்லை என்றும் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். நடவடிக்கைகள் முழுவதும் முடிந்த பிறகு தேதி இறுதி செய்யப்படும் என்றார்.
700, 800, 1,800, 2,100, 2,300 மற்றும் 2,500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ஏலத்துக்கான குறைந்த பட்ச விலைத் தொகை அடங்கிய பரிந்துரையை கடந்த மாதம் அளித்தது என்று குறிப்பிட்டார். இதுதொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கருத்துகளை டிசம்பர் 21-ம் தேதி வரை வரவேற்பதாக டிராய் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிரான கருத்துகள் டிசம்பர் 28-ம் தேதி வரை வரவேற்கப்படுவதாகவும் டிராய் தெரிவித்துள்ளதாக ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.