சென்னை - கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடம்; ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்பந்தம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடத்தில் சாலை இணைப்பைத் தரம் உயர்த்தவும், தமிழகத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் 484 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி கையெழுத்திட்டுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், சென்னை- கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடத்தில் தொழில்துறையின் வளர்ச்சிக்காகவும் 484 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இன்று ஆசிய வளர்ச்சி வங்கியும் மத்திய அரசும் கையெழுத்திட்டன.

கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாக, மேற்குவங்கம் முதல் தமிழகம் வரையிலான சென்னை- கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடம், தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் உற்பத்தியோடு இந்தியாவை இணைக்கின்றது. கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் பணிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி, இந்திய அரசின் முன்னணி கூட்டாளியாக செயல்படுகிறது.

தமிழ்நாடு தொழிலியல் இணைப்புத் திட்டத்தில், இந்திய அரசின் சார்பாக பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக அதன் இந்திய இயக்குநர் டேகியோ கொனிஷியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி இடையே மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் சுமார் 590 கிலோமீட்டர் வரையிலான மாநில நெடுஞ்சாலைகளை இந்தத் திட்டம் தரம் உயர்த்தும். தொழில் முனையங்களை கடலோர நிலப்பகுதி மற்றும் துறைமுகங்களுடன் இணைப்பதன் வாயிலாக, குறிப்பாக, சர்வதேச உற்பத்தி இணைப்புகள் மற்றும் சர்வதேச மதிப்பு சங்கிலிகளில் இந்திய தயாரிப்புகளின் பங்கு அதிகரிக்கப்படுவதுடன், இந்த வழித்தடத்தில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

சாலை கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்திற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களும் வலுவடையும். கூடுதலாக, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் திட்டமிடல் திறனை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in