Published : 16 Jun 2021 11:27 AM
Last Updated : 16 Jun 2021 11:27 AM

ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: ஏன், எதற்கு? - முக்கிய தகவல்கள்

புதுடெல்லி

உலக அளவில் தங்கத்தை ஆபரணமாக பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இதனால் ஆண்டுதோறும் இந்தியாவில் தங்கத்தின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியா ஆண்டுக்கு 700 டன் முதல் 800 டன் வரையிலான தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல்கள் வருமாறு:

தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.

அத்துடன் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இதன்படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

இதற்கு முன்பு 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது தற்போது மூன்று கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பெற்றதாக இருக்க வேண்டும்.

அதேபோல இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும் .

தற்போது சில வர்த்தக நிறுவனங்கள் தாமாக முன்வந்து பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை விற்பனை செய்கின்றன.

இதுவரை 40 சதவீத நகைகள் மட்டுமே இத்தகைய முத்திரை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஹால்மார்க் முத்திரை அளிப்பதற்கு 234 மாவட்ட மையங்கள் உள்ளன. ஏறக்குறைய 28,849 வர்த்தகர்கள் பிஐஎஸ் பதிவு பெற்றுள்ளனர்.

மாவட்டங்களில் உள்ள தங்க நகை வர்த்தகர்கள் அனைவரும் ஹால் மார்க் மையங்களில் பதிவு செய்ய வேண்டும்.

இதை மீறுவோர் மீது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது அவரிடம் உள்ள பதிவு செய்யப்படாத தங்கநகைகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x