

1956-ம் ஆண்டு பெராரி கார் மாடல் 2.8 கோடி டாலருக்கு (ரூ. 185 கோடி) ஏலம் விடப்பட்டுள்ளது. சோத்பி நிறுவனம் நடத்திய பழைய மாடல் கார் ஏலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த பெராரி கார் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
290 எம்எம் பெராரி மாடல் காரின் சேஸிஸ் 0626 ஆகும். இதை வடிவமைத்தவர் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் ஜுவான் மானுவல் பான்ஜியோ. ஐந்து முறை ஃபார்முலா ஒன் பந்தயத்தில் பட்டம் வென்றவரால் வடிவமைக்கப்பட்டதாகும். 290 எம்எம் சேஸிஸ் கொண்ட இத்தகைய கார் மொத்தமாக நான்குதான் வடிவமைக்கப்பட்டது.
இந்த கார் 28 லட்சம் டாலர் முதல் 32 லட்சம் டாலர் வரை போகலாம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு பெராரி 250 ஜிடிஓ பெர்லினெட்டா மாடல் கார் 3.80 கோடி டாலருக்கு ஏலம் கேட்கப்பட்டதுதான் அதிகபட்ச ஏல கேட்பாகும்.
அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பான்ஜியோ மிகச் சிறந்த ஃபார்முலா 1 பந்தைய வீரராகக் கருதப்படுகிறார். 3.5 லிட்டர், வி12 இன்ஜினை இயக்குவதில் இவர் மிகச் சிறந்து விளங்கினார். இதற்கு முன்பு இந்த கார் பிரான்ஸைச் சேர்ந்த மாஸ் டூ குளோஸ் என்பவரிடம் 34 ஆண்டுகள் இருந்துள்ளது.
இதேபோல 356சி போர்ஷே மாடல் கார் 17 லட்சம் டாலருக்கு ஏலம் போனது. இது 6 லட்சம் டாலருக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை மீறி அதிக விலைக்கு இது ஏலம் கேட்கப்பட்டுள்ளது.