

மாகி நூடுல்ஸ்களை மீண்டும் சோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (எப்எஸ்எஸ்ஏஐ) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்னதாக நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மாகி நூடுல்ஸ் மற்றும் அதைப்போன்ற 9 வகை தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மஹாராஷ்டிர உயர்நீதிமன்றம் விலக்கியது.
இது தொடர்பாக எப்எஸ்எஸ்ஏஐ தாக்கல் செய்த மனுவுக்கு மஹாராஷ்டிர மாநில அரசு மற்றும் நெஸ்லே நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அத்துடன் மாகி நூடுல்ஸ்கள் மீண்டும் சோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கை ஜனவரி 13-ம் தேதிக்கு மீண்டும் விசாரிக்கப் போவதாகவும், அப்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நெஸ்லே நிறுவனம் அரசு அங்கீகாரம் செய்த ஆய்வகங்களில் சோதனை நடத்தாமல் தாங்களாகவே சில ஆய்வகங்களைத் தேர்வு செய்து அவற்றில் சோதனை செய்து தரச் சான்று அளித்துள்ளது உணவு பாதுகாப்பு தடைச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு முரண்பாடாக உள்ளது என்று எப்எஸ்எஸ்ஏஐ சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்தகி சுட்டிக் காட்டினார். இதையடுத்து அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் சோதனை நடத்துமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 13-ம் தேதி நெஸ்லேயின் மாகி நூடுல்ஸ் மற்றும் 9 தயாரிப்புகள் மீதான தடையை மும்பை உயர்நீதி மன்றம் நீக்கியது குறிப்பிடத் தக்கது.