

கோழிகளைத் தாக்கும் முக்கிய நோய்களில் ராணிக்கெட் நோயும் ஒன்று. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
இந்த மருந்து குருணைகள் வடிவில் உள்ளது. 25 கோழிகளுக்குத் தேவையான மருந்து ஒரு புட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து அடங்கியுள்ள குருணைகளை ஒரு தட்டில் பரப்பி வைத்தால், உணவு உண்பதைப் போன்றே கோழிகள் அவற்றை கொத்தி உண்ணும்.
கோழியைப் பிடித்துக் கொண்டு அதன் வாயிலும் குருணை மருந்தை போடலாம். ஒரு கோழிக்கு இரண்டு குருணைகள் வழங்கிட வேண்டும். அதற்கு மேல் எடுத்துக் கொண்டாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. காலையில் இந்த மருந்தை கொடுப்பதாக இருந்தால், அதற்கு முந்தைய நாள் இரவில் கோழிகளுக்கு தீவனம் அளிக்காமல் இருப்பது நல்லது.
மேலும் விவரங்களுக்கு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை நுண்ணுயிரியல் துறையை அணுகலாம். தொடர்புக்கு: 044 2530 4000