Published : 01 Jun 2021 09:42 AM
Last Updated : 01 Jun 2021 09:42 AM

பொருளாதாரத்தை புரட்டி எடுக்கும் கரோனா 2-வது அலை: 1 கோடி பேருக்கு வேலையிழப்பு

புதுடெல்லி

கரோனா இரண்டாவது அலையால் நாடுமுழுவதும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது.

கரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவிலும் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. சம்பள உயர்வு பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிப்போனது. ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்று போனது.

பின்னர் கரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டன. தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. சொந்த ஊர் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். இந்திய பொருளாதாரம் மெல்ல மீளத் தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் கரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது.

இதனால் மீண்டும் ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதனால் மீண்டும் பொருளாதார பாதிப்பு, வேலையிழப்பு தெரிய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் மகேஷ் வியாஸ் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு மீண்டும் பெரிய அளவில் தெரிய தொடங்கியுள்ளது.

வேலையிழப்பு வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை. வேலையில்லா திண்ட்டாட்டம் ஏப்ரல் இறுதியில் 8 சதவீதமாக உயர்ந்து இருந்தது. மே 31-ம் தேதியில் இது 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கரோனா இரண்டாவது அலையால் நாடுமுழுவதும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளதாக எங்கள் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி கரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே 97 சதவீத வீடுகளில் முந்தைய நிலையை ஒப்பிட்டால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பு என்பது பல்வேறு அளவுகளி்ல் வெவ்வேறு விதமாக உள்ளது.

லாக்டவுன் காலத்தில் தினக்கூலி வாங்கும் தொழிலாளர்களும், சிறு தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் வேலையின்மை விகிதம் 10 சதவிகித்தை எட்டும். நகர்ப்புறங்களில் இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x